“புத்தர் சொன்ன அழகான விஷயமும் மேக்கப் இல்லாத முகங்களும்!” – `டூ-லெட்’

65-வது தேசிய விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது…..

இதில் சிறந்த தமிழ் படத்துக்கான விருதை ‘டூ-லெட்’ வென்றுள்ளது. இதை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியிருக்கிறார். ‘ஜோக்கர்’, ‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த இவர் இயக்கியிருக்கும் முதல் படம் இது. இப்படத்துக்கு தொடர் வாழ்த்துகள் வந்த குவிந்த வண்ணம் உள்ளன.

இத்தனை படங்களுக்கு மத்தியிலே இப்படம் கவனிக்கப்பட்டிருக்கின்றதென்பது சாதாரண விடயமல்ல. நிறைய சிரமங்களுக்கிடையில்தான் இந்தப் படத்தைத் தயாரித்ததாக இப்படத்தின் இயக்குநர் செழியன் பல நேர்காணல்களில் தெரிவித்திருக்கிறார். அவருடைய நண்பர்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எடுத்த படம் இது.

அதனடிப்படையில் நிறைய ஃபிலிம் பெஸிட்டிவல்களில் இந்தப் படம் விருது வாங்கியிருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த சவுண்ட்..,, கிட்டத்தட்ட எல்லா விருதும் வாங்கியிருக்கிறது. இத்தனை விருதுகள் வாங்கியிருந்தாலும், இந்தியாவில் தேசிய விருது வாங்கியிருப்பது இன்னும் பெருமைக்குரிய விடயமாகும்.

சென்னையில் படத்துக்கான ஷூட்டிங் நடந்தது. படத்துக்காக எந்த செட்டும் போடவில்லை. எல்லாமே லைவ் லொக்கேஷன்ல எடுத்தது. முப்பது நாளில் முழுப் படத்தையும் எடுக்க முடிந்தது சிறப்பான விடயம். படத்தில் நடித்தவர்கள் மேக்கப் போடவில்லை.

 இந்தப் படத்தை தயாரிக்கச் சொல்லி சில தயாரிப்பாளர்களை அணுகினார்கள். ஆனால், எல்லோருமே படத்துல் சில பாடல் காட்சிகளை வைக்கச் சொன்னார்கள். ஹீரோயினா நடிக்க, பெரிய நடிகை யாரையாவது ஒப்பந்தம் செய்ய சொன்னார்கள் பல தயாரிப்பாளர்கள். இயக்குநருக்கு அதில் உடன்பாடில்லை.
 ஏனென்றால் இது யதார்த்தமான படம். படத்தில் பாடல் மட்டுமில்லை, இசையே கிடையாது, இதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம். இப்படி ஒரு முயற்சியை எடுக்க யாரும் முன்வராதப்போதுதான், இயக்குநர் செழியனின் மனைவியே இந்தப் படத்தை தயாரித்தார். மனைவி கொடுத்த ஊக்கத்தில் தான் படம் தயாரிக்க ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.