பல உயிர்களை காப்பாற்றி மறைந்து வாழும் மனிதன்!

நம்மில் பலர் இலங்கையில் பிறந்து, கல்வி கற்று பின் வேலைகளைப் பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுக்கு சென்று விடுகின்றனர். இதன்பின் நம் தாய் நாட்டை எள்ளளவும் கவனத்தில் கொள்வதில்லை.

இவ்வாறான நிலையில் தாய் நாட்டிற்காக எத்தனை பெரிய வாய்ப்புக்களையும் தாரைவார்த்து விட்டு மக்களுக்காக சேவை செய்கின்ற மனிதர்களும் எம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இவ்வாறு தன் தாய் நாட்டு மக்களுக்காக சேவை செய்து தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் மறைந்து வாழும் உன்னத மனிதர்களுள் ஒருவரே இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் இவர் யாழ்ப்பாணத்திலுள்ள பல உயிர்களை காப்பாற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு தற்போது வறுமையில் வாடிக் கொண்டிருப்பவர்களில் இதய சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய தேவையுள்ள பலர் உள்ளனர்.

இவ்வாறானவர்களுக்கு வைத்தியர் சிதம்பரநாதன் முகுந்தன் இலவசமாக சத்திர சிகிச்சை செய்து வருகிறார்.

அத்துடன், வசதி படைத்த மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த திறந்த இதய சத்திர சிகிச்சையை யாழ். குடா நாட்டில் வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டிய சாதனையாளராகவும் முகுந்தன் திகழ்கின்றார்.

இலங்கையில் கொழும்பு, காலி, கண்டி போன்ற இடங்களில் மாத்திரமே இதய சத்திர சிகிச்சை செய்வதற்கான வசதி காணப்பட்ட நிலையில், இதய சத்திரசிகிச்சை நிபுணர் முகுந்தன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு பொறுப்பேற்று சென்ற பின் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொண்டுள்ளார்.

இதன் பயனாகவே இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் இதய சத்திர சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.