23ஆம் திகதி புதிய அமைச்சரவை

பிரித்தானியாவுக்கு இன்று பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், அமைச்சரவை முற்றாக மாற்றியமைக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட இழுபறிகளால் ஐதேக அமைச்சர்கள் சிலரது பதவிகளில் மட்டும் மாற்றங்கள் செய்யப்பட்டன.

அதையடுத்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேர் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகினர்.

இந்த நிலையில், அமைச்சரவை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

எனினும் கூட்டு அரசாங்கத்தை முன்னெடுப்பது தொடர்பான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறிகளால்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய பின்னரே அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது.

இன்று பிரித்தானியா செல்லும் ஜனாதிபதி எதிர்வரும் 22ஆம் திகதி நாடு திரும்புவார். அதன் பின்னர், வரும் 23ஆம் நாள் அமைமச்சரவை மாற்றம் இடம்பெறும் என்று ஜனாதிபதியின் அதிபரின் செயலர் ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.