சித்திரை மாதத்தில் இந்த நாட்களில் வழிபாடு செய்தால் வேண்டிய வரங்களை பெறலாம்…!

சித்திரை மாதத்திற்கு ‘சைத்ர மாதம்’ என்ற பெயரும் உண்டு. சைத்ர மகரிஷி பிறந்த மாதம் என்பதால் இந்தப் பெயர் வந்தது. மிகவும் புண்ணிய மாதமான சித்திரை, அம்மனுக்கு உகந்தது.
எனவேதான் இந்த மாதத்தில் அம்மன் கோவில்களில் விழா எடுக்கப்படுகிறது. இந்த காலத்தில் அக்னி நட்சத்திரம் உச்சத்தில் இருப்பதால், வெயில் கூடுதலாக இருக்கும். அதன் தாக்கத்தில் இருந்து நம்மை குளிர்ச்சி அடையச் செய்வதற்காக இவ்விழாவின்போது மஞ்சள் நீராட்டு விழா நடத்துகின்றனர்.
சந்திரன் வழிபாடு:
சித்ரா பவுர்ணமி தினத்தன்று இரவில் பெண்கள் சுமங்கலி பூஜை செய்தால், என்றும் நித்ய கல்யாணியாக (தீர்க்க சுமங்கலி) இருப்பர் என்பது ஐதீகம். அன்று இரவில் தம்பதியர் பரிபூரணமாக பிரகாசிக்கும் சந்திரனைப் பார்த்து, களங்கம் இல்லாத வாழ்வு கிடைக்க வேண்டினால் குடும்பம் சிறப்பாக இருக்கும்.
கிரிவல நாள்:
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது, சக்தி வாய்ந்தது. எனவே அன்றைய தினம் சத்யநாராயணர் மற்றும் சித்ரகுப்தரை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களைத் தரும்.
இந்நாளில் கிரிவலம் வருவதால் உடலுக்கு புதுத்தெம்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக அருணாச்சலம் அருளும் திருவண்ணாமலை கிரிவலம் வாழ்வில் பல நன்மைகளை வழங்கும்.
நான்கு முக நடராஜர்:
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள நடராஜர், நான்கு முகங்களுடன் வித்தியாசமான கோலத்தில் உள்ளார். இவரை ‘குஞ்சிதபாத நடராஜர்’ என்கின்றனர். இவரது பாதத்திற்கு கீழே முயலகன் இல்லை. சித்ரா பவுர்ணமியன்று இவர் பரத்வாஜ முனிவருக்கு காட்சி தந்ததாக ஐதீகம். எனவே அந்த நாளில் இவரை வழிபட்டால் குறைவில்லாத வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பொன் வைக்கிற இடத்தில் பூ:
‘பொன் வைக்கிற இடத்தில் பூ வையுங்கள்’ என்ற பழ மொழியை, நமது பெரியவர்கள் சொல்ல பலரும் கேட்டிருக்கலாம். இந்த வழக்கு மொழி எப்படி வந்தது தெரியுமா?
சித்திரை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் குபேரனுக்கு உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் 108 தங்கம் அல்லது வெள்ளிக்காசுகளால் மகாலட்சுமியை அர்ச்சித்து ‘லட்சுமி குபேர பூஜை’ செய்தால் வாழ்விற்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால், எல்லோருக்கும் அந்த பாக்கியத்தை பகவான் கொடுப்பதில்லை. எனவே வசதி இல்லாதவர்கள் தங்க காசுகளுக்கு பதிலாக 108 பூக்களால் பூஜித்தாலே போதும். அந்த பலன் கிடைத்து விடும். இதை முன்னிட்டு வந்ததே அந்தப் பழமொழி.