சுன்னாகம் வாழைக்குலை சந்தைப்பகுதி வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறதா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வர்த்தக நகரான சுன்னாகத்தின் சந்தைப்பகுதியில் ஒருபகுதியை வெளிமாவட்ட வர்த்தகர்களுக்கு தாரைவார்க்கும் செயல்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச வர்த்தகர்களினால் கவலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந் நடவடிக்கையை முற்றாகக் கைவிடேவண்டுமென சுன்னாகம் மத்திய சந்தை உட்புற வியாபாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை குறித்த வியாபாரிகள் சங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், சுன்னாகம் மத்திய சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நாம் வெளிமாவட்ட வர்த்தகர்களின் எமது பிரதேசம் நோக்கிய படையெடுப்பினால் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பாரியபிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றோம். கடந்த ஒரு தசாப்த காலமாக வெளிமாவட்ட வர்த்தகர்களின் யாழ்ப்பாணம் நோக்கிய படையெடுப்பு அதிகரித்துள்ளது. அதிலும் யாழ்ப்பாணத்தின் வர்த்தக நகரமாக விளங்கும் சுன்னாகம் நோக்கி அதிகமான வெளிமாவட்ட வர்த்த்தகர்கள் வருகைதந்து பாரியளவில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனால் எமது பிரதேச மக்கள்தொகைக்கு தேவையான அளவுக்கு அதிகமான வர்தக நிலையங்கள் உருவாக்கப்பட்டு பிரதேச வர்த்தகர்களின் வியாபார நடவடிக்கைகள் பாரிய வீழ்ச்சியை அடையும் துர்ப்பாக்கிய நிலையை தோற்றுவித்துள்ளது.

இதன்காரணமாக பலவர்த்தகர்கள் தமது பாரம்பரிய தொழில்களையே கைவிட்டு எந்தவொரு மாற்றுவழியையும் ஏற்படுத்த முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் பல வர்த்தகர்கள் தொழில் நட்டத்தால் கடனாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். *அத்துடன் கடன் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்று முதலீட்டை மேற்கொள்ளும் பிரதேச வர்த்தகர்கள் மேற்படி நிலைமையால் தொழில் இடம்பெறாது கடனை அடைக்கமுடியாத நிலையில் அல்லாடி வருகின்றனர். பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

இதுதவிர மேற்படி வெளிமாவட்ட வர்த்தகர்களினால் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி வருவதோடு சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளையும் கண்காணித்துள்ளோம்.
எனவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும்பொருட்டு வெளிமாவட்ட வர்த்தகர்களை எமது பிரதேசசபை அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யுமாறு ஏற்கனவே பலதடவை கோரியிருந்தோம். முன்னைய பிரதேச சபை தவிசாளரிடமும் இதுபற்றி முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எமது கோரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டனர்.

தற்போதைய புதிய தவிசாளரிடமும் இதுபற்றி கோரிக்கை முன்வைத்தோம் ஆனால் அதை எவ்விதத்திலும் கருத்திலெடுக்காது விட்டுள்ளனர். தற்போது சுன்னாகம் சந்தையில் வாழைக்குலைச் சந்தைப்பகுதிக்குள் வெளிமாவட்ட வர்ர்த்தகர்களுக்கென பிரத்தியேகமாக கடைகள் அமைக்க பிரதேசசபையால் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இது எவ்விதத்திலும் நியாயமற்ற செயலாகும். எமது கோரிக்கைக்கு முற்றிலும் எதிரான நடவடிகாகை ஆகும்.

இது தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தாத்தன் அவர்களை கடந்த 08.04.2018 அன்று சந்தித்து எமது கோரிக்கை தொடர்பில் விளக்கியிருந்தோம். அவர் தவிசாளருடன் மீண்டும் எம்மை பேசும்படியும் அவ்வாறு சாதகமான பதில் கிடைக்காதவிடத்து தம்மை மீண்டும் சந்திக்கவருமாறும் கூறியுள்ளார்.

நெல்லியடி உள்ளிட்ட பல இடங்களில் வெளிமாவட்ட வர்த்தகர்களை தடை செய்துள்ள நிலையில் ஏன் எமது பிரதேசத்தில் இதை நடைமுறைப்படுத்த பின்நிற்கின்றனர் எனத் தெரியவில்லை. அதற்கும் மேலாக வெளி மாவட்ட வர்த்தகர்களுக்கு சந்தையை தாரைவார்த்துக் கொடுக்க விளைகின்றனர்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எமக்கு தகுந்த தீர்வைப்பெற உதவுவார் என எதிர்பார்க்கின்றோம். தொடர்ந்தும் இந்நிலை நீடிப்பின் பிரதேசசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளோம் என்பதையும் தெரிவித்து நிற்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது