பதவியை துறக்கவும் தயார்! – மைத்திரியின் அறிவிப்பு!

கட்சியின் வளர்ச்சியை முன்னிட்டு அவசியம் ஏற்பட்டால் சுந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விலகிக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு (திங்கட்கிழமை) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று கட்சியின் முன்னேற்றத்திற்காகவும், அதன் வெற்றிப் பயணத்திற்காகவும் அனைத்து உறுப்பினர்களும் கடமைப்பாட்டுடன் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக தேசிய அரசாங்கம் தொடர்ந்து செயற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மீண்டும் மத்திய குழுவை நாளை கூட்டி, அரசாங்கத்தில் இணைந்திருப்பதா வெளியேறுவதா என முடிவு செய்வதெனவும் சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியில் உட்பூசல்கள் வலுவடைந்து வரும் நிலையில் சுதந்திரக் கட்சிக்குள்ளும் மோதல்கள் ஏற்பட்டுள்ளதா? எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.