யாழில் 16 வயது மாணவனின் உயிரை பறித்த மர்மத்திரவம்!

கிளிநொச்சியில் கல்வி கற்று க.பொ.த உயர்தரப் படிப்பினை தொடர்வதற்கான யாழ்ப்பாணத்திற்கு வந்த 16 வயது மாணவன் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன் நிலாபவன் (வயது 16) என்னும் மாணவனே மேற்படிச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்து கோப்பாயில் தங்கியிருந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வாந்தி எடுத்த நிலையில் கோப்பாய் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர். அவர் ஒரு வகை நச்சுத் திரவத்தை அருந்தியதினாலேயே உயிரிழந்தார் என்றும் வைத்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அது என்ன திரவம் என்பது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவரவில்லை என்றும், அதனை அறிந்து கொள்வதற்கான உயிரிழந்த மாணவனின் உடல் கூற்றுகள் சில கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துளள்னர்.

குறித்த மாவணன் தனது உயர் படிப்பினை வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் தொடர்வதற்கு விரும்பம் தெரிவித்திருந்தார். இருப்பினும் அவருடைய பெற்றோர் அவரை யாழ்ப்பாணத்தில் கல்வியினை தொடருமாறு கோரியுள்ளனர்.

இதனால் மாணவன் மணவருத்தப்பட்ட நிலையில் இருந்தார் என்றும் பொலிஸார் மேற்கொண்டுள்ள ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.