மக்கள் காணிகளிலிருந்து வெளியேற 880 மில்லியன் கேட்கும் இராணுவம்!


வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து வருவதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் மீளக் குடியேறிய கடற்தொழிலாளர்களுக்கு உதவித் திட்டங்கள் இன்று (05) வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கில் பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டியுள்ளது. இவ் யுத்தத்தால் இந்தியாவுக்குச் சென்ற மக்களில் 60 ஆயிரம் மக்கள் மீண்டும் இங்கு குடியேறுவதுக்காக பதிவு செய்துள்ளனர். இவ்வாறு வருகை தரவுள்ள மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது.

அம் மக்களுக்கும் மேலும் இங்குள்ள மக்களுக்குமாக மொத்தம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்க வேண்டியுள்ளது. இதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 14 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 60 வீதமான நிதியில்இ 12 ஆயிரத்து 700 வீடுகள் கட்டப்பட்டன.

அதே போன்று 2017 ஆம் ஆண்டு 9 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 5 ஆயிரம் வீடுகள் மாத்திரமே கட்டப்பட்டிருந்தன. ஒதுக்கப்பட்ட நிதியில் மீதம் ஏனைய உட்கட்டமைப்புக்களுக்காக பயன்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி வீடமைப்பு அதிகாரசபை ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது.


மேலும் கடந்த கால நிலமைகளால் மக்கள் இழந்தவற்றில் ஏதாவது ஒன்றுக்கான இழப்பீட்டினை வழங்குவதுக்கு நாம் தீர்மானித்துள்ளோம். இதற்காக எம்மிடம் 32 ஆயிரத்து 800 கோவைகள் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் எமது இலக்கு 19 ஆயிரம் கோவைகளையாவது நிறைவு செய்ய வேண்டும் என்பதேயாகும்.

அவற்றில் மாதாந்தம் 2000 கோவைகள் வீதம் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே அதில் உள்ள சிறு சிறு தவறுகளை திருத்தி அவற்றை விரைவாக பூர்த்தி செய்ய அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டியதுடன் அதற்காக நடமாடும் சேவையையும் ஆரம்பிக்கவுள்ளோம்.

காணியற்ற மக்களுக்கு காணிகளை கொள்வனவு செய்து கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக அரசாங்கத்துக்கு 680 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகின்றது. இவற்றை விட மீளக் குடியமர்ந்த மக்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதே பிரச்சனையாகவுள்ளது. அதற்காக வடக்கு கிழக்கில் தொழிற்சாலைகளை அமைப்பதுக்கு கலந்தாலோசித்து வருகின்றோம். மாங்குளம் மட்டக்களப்பு பூநகரி போன்ற இடங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.


தொழிற்சாலைகளில் கட்டாயமாக வடக்கில் இருந்து 1000 பேருக்கும் கிழக்கில் இருந்தும் 1000 பேருக்கும் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளோம். அவ்வாறு தொழில்களை வழங்குவர்களுக்கே வீட்டு திட்டத்தை அமைக்கும் பணியை வழங்கவுள்ளோம். 8 மாவட்டங்களிலும் உற்பத்தி வலயங்களை அமைக்கவுள்ளோம்.

மேலும் படையினர் வசமுள்ள காணிகளில் 530 ஏக்கர் காணிகளை மீள பொதுமக்களிடம் ஒப்படைப்பதுக்கு இராணுவம் 880 மில்லியன் ரூபாய் நிதிகோரியுள்ளது. இது தொடர்பாக நாம் நிதி அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளதுடன்இ இந்நிதியை பெற்று அக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்வதுக்கான அமைச்சரவை பத்திரங்களை தயாரித்து வருகின்றோம் என்றார்.