அப்பாவின் வருகைக்காக சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் சகீயும் கனியும்!

” ஒரு மென்பொருள் பொறியியலானாக வர வேண்டும் என்பதே எனது இலக்கு.” , “எனது இலக்கு ஒரு வைத்தியர் ஆவது. ” என்கின்றார்கள் அரசியல் கைதியாக இருந்து ஆயுதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டு தற்போது சிறையில் காலத்தை கழிக்கும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்.

கண்டி நெடுஞ்சாலையில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலுக்கு அருகினால் செல்லும் குன்றும் குழியுமான மண் வீதி ஊடாக சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்றால் மருதநகர் எனும் அழகிய ஊர் உள்ளது.

மருதமர நிழல்களும் வாய்க்கால் தண்ணீரும் அந்த ஊருக்கு அழகினை மட்டும் கொடுக்கவில்லை. பசுமையையும் குளிர்மையையும் கொடுக்கின்றது. ஊருக்கு செல்லும் வழியில் தனியே இயற்கை பசுமையை மாத்திரம் காணவில்லை.

பச்சை உடுப்புக்களுடனும் பச்சை நிற வர்ண பூச்சுக்கள் பூசிய மதில்கள் , வீடுகள் என காணப்பட்டன. அவை இராணுவ முகாம்களாக இருந்து பின்னர் பொதுமக்களிடம் மீள கையளிக்கப்பட்டு உள்ளது என்பது புலனாகிறது. இருந்த போதிலும் இன்னும் சில வீடுகளை இராணுவத்தினர் தம் வசம் வைத்துள்ளார்கள்.

அந்த வீதி ஊடாக சென்று, மருதநகர் பிள்ளையார் கோவிலடியில் ” அந்த அரசியல் கைதியின் மனைவி வீடு எங்கே ?” என கேட்டால் ” யார் அந்த தைக்கிற பிள்ளையின் வீடா?” என வீட்டினை அடையாளம் காட்டினார்கள்.

“நல்ல பிள்ளை அநியாயமாக போட்டுது .. அந்தா அந்த சந்தியில் அந்த பிள்ளையின் பனர் தான் கட்டி இருக்கு அந்த பாதையால் போங்கோ ” என பாதை காட்டி விட்டார்கள்.

குன்றும் குழியுமாக தார் என்றால் என்ன என்றே தெரியாத வீதியாக அந்த வீதி சென்றது. அந்த வீதியால் மருதநகர் D 4 பகுதியில் அமைந்துள்ளது உயிரிழந்த யோகராணியின் வீடு.

அந்த வீட்டில் ஒரு சில உறவினர்கள் மாத்திரமே நின்றனர். அது வரையில் அந்த வீட்டில் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணியும் அவரகளது பிள்ளைகளும், யோகராணியின் தாயுமே வசித்து வந்துள்ளனர். யோகராணியின் ஆண் சகோதர்கள் சிலவேளைகளில் வீட்டுக்கு வந்து செல்வார்கள்.

யோகராணி கிளிநொச்சியில் இருந்த 2005ஆம் ஆண்டு கால பகுதியில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் என்பவரை திருமணம் முடித்தார்.

அவர்களின் இல்லற வாழ்க்கை இரண்டு வருட கால பகுதியே மிகுந்த சந்தோஷத்துடன் கழிந்தன. மூத்த மகன் கனிரதன் பிறந்தான். இரண்டாவது மகளான சங்கீதா பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொழும்புக்கு வேலை விடயமாக சென்ற ஆனந்த சுதாகரன் கைது செய்யப்பட்டார்.

கொழும்பு பிலியந்தலை பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற பஸ் குண்டு வெடிப்பில் ஆனந்தசுதாகரனின் பங்களிப்பு உள்ளதாக பொலிசாரால் கொழும்பில் வைத்து ஆனந்தசுதாகரன் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற பொலிஸ் விசாரணைகளை அடுத்து பஸ் குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றால் ஆனந்தசுதாகரன் குற்றவாளியாக காணப்பட்டார். அதனால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.

கணவன் சிறையில் இருக்கும் போது யோகராணியே தனது இரு பிள்ளைகளையும் வளர்த்து வந்தார். ஒரு பெண்ணாக தனது குடும்ப சுமையை தனியே தாங்கினார்.

வீட்டில் இருந்து ஆடைகள் தைத்து கொடுப்பதன் ஊடாகவும் வீட்டில் வளர்த்த ஆடு மற்றும் 4 கோழிகள் ஊடாக வரும் வருமானத்தையும் வைத்து தனது தாயாருடன் இருந்து இரு பிள்ளைகளையும் படிப்பித்தார்.

அவர்களின் மூத்த மகனான ஆனந்தசுதாகரன் கனிதரன் கிளிநொச்சி கனிஸ்ட வித்தியாலயத்தில் தரம் 07ஆம் கல்வி கற்று வருகின்றார். இரண்டாவது மகளான ஆனந்தசுதாகரன் சங்கீதா தரம் 05 கல்வி கற்று வருகின்றார். இந்த வருடம் புலமை பரிசு பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளை பெற வேண்டும் என முயற்சியுடன் கற்று வருகின்றார்.

தனது இரு பிள்ளைகளையும் யோகராணி காலையில் தனது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று பாடசாலையில் இறக்கி விட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து மதிய சாப்பாடு செய்வதுடன் வீட்டில் இருந்த வாறே தையல் வேலைகளிலும் ஈடுபடுவார்.

அவர்களுக்கான வீட்டு திட்டம் கிடைக்க பெற்று வீட்டினை கட்டும் போது யோகராணி இந்த புது வீட்டில் நான் எனது கணவர் பிள்ளைகள் என சந்தோஷமான புது வாழ்க்கையை வாழுவோம் என பலத்த எதிர்ப்பார்ப்புடன் தான் வீட்டினை கட்டி முடித்தார்.

ஆனால் அவரின் எதிர்பார்ப்பு கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08ஆம் திகதி தகர்ந்தது. ஆனந்தசுதகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்று தீர்ப்பளித்து.

அன்றுடன் யோகராணியின் எதிர்ப்பார்ப்புகள் தகர்ந்ததுடன் சிறுவயதில் இருந்தே ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தவர் , கணவருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பினை அடுத்து தனது உடல் நலத்தில் அக்கறை கொள்ளாது உணவை தவிர்த்து யோசனைகளில் மூழ்கி போனார்.

சில வேளைகளில் உணவை தட்டில் போட்டு கதிரையில் இருந்து சிறிது உணவை உண்ட பின்னர், உணவு தட்டுடன் வெற்றுசுவரை நோக்கி ஆழ்ந்த யோசனையில் இருப்பார். அவரின் தாயார் வந்து கேட்ட பின்னரே யோசனையில் இருந்து மீள வருவார்.

இவ்வாறு உடல் நலத்தில் அக்கறை கொள்ளது ஆழ்ந்த யோசனைகளில் உணவை தவிர்த்து இருந்தமையால் நோயின் தீவிர தாக்கத்திற்கு இலக்கானார். அந்நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

புதிதாக கட்டிய வீட்டில் கணவர் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ ஆசைபட்ட யோகராணியின் உடல் அந்த புது வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது. அதற்கு அஞ்சலி செலுத்தவே கணவரை சிறைச்சாலை அதிகாரிகள் அழைத்து வந்தனர்.

தந்தை கைது செய்யப்படும் போது மூத்த மகன் கனிதரன் ஒரு வயது குழந்தை இரண்டாவது பிள்ளையான சங்கீதா தாயின் வயிற்றில் எட்டுமாத சிசுவாக இருந்தார்.

வீட்டுக்கு வந்த தந்தையை மகன் கண்ட போதிலும் தந்தையுடன் சேர்ந்து இருக்கவோ , அவருடன் கதைக்கவோ முடியாத நிலையில் மூத்த மகன் கனிதரன் தாயின் இறுதி நிகழ்வில் ஈடுபட்டு இருந்தான்.

மகள் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பிறந்தததில் இருந்தே தந்தையின் அரவணைப்பை அனுபவிக்காத சங்கீதா அன்று முதல் முதலாக தனது பத்து வயதில் தந்தையின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

மகள் பிறந்ததில் இருந்தே அவளை தூக்கி அரவவனைக்க முடியாத நிலையில் இருந்த தந்தையும் அன்றைய தினமே மகளை தூக்கி மடியில் இருந்தி வைத்திருந்தார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன பேசுவது என தெரியாத நிலையில் பார்வையாலே சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.

மனைவியின் இறுதி நிகழ்வில் வெறும் மூன்று மணி நேரமே ஆனந்தசுதாகரனால் கலந்து கொள்ள முடிந்தது. யோகராணியின் இறுதி கிரியைகள் முடிவடைந்து உடல் தகனத்திற்காக உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்லும் போது , அவரது மூத்த மகன் சுடுகாடு நோக்கி தாயின் பூதவுடலுடன் சென்று விட , தந்தையை அழைத்து வந்த சிறைச்சாலை அதிகாரிகள் மீள தந்தையை சிறைக்கு அழைத்து செல்ல முயன்ற போது ,பத்து வருட காலமாக தந்தையின் அரவணைப்பு இல்லாது வாழ்ந்த சங்கீதாவும் தந்தையுடன் சிறைக்கு செல்ல சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.

” நான் விரைவில் வெளியே வருவேன். நீங்க நல்லா படியுங்க அண்ணாவுடன் இருங்க” என ஆறுதல் வார்த்தை கூறி தந்தை சிறைச்சாலை நோக்கி சென்றார்.

அன்றில் இருந்து தந்தையின் வருகையை எதிர்பார்த்து இருக்கிறாள் சங்கீதா. தந்தையை விடுதலை செய்ய கோரி ஜனாதிபதி , ஜனாதிபதியின் மகள் ஆகியோருக்கு கடிதமும் எழுதினார்கள். அந்த பிஞ்சுகள் இரண்டும். அந்த பிஞ்சுகள் இரண்டும் ஜனாதிபதியை நேரில் சந்தித்தும் கோரிக்கையும் விடுத்தள்ளன.

பிஞ்சுக்களின் கோரிக்கையை செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா அப்பாவின் விடுதலைக்கு நடவடிக்கை எடுப்பேன் என அந்த பிஞ்சுகளுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

தற்போது அவர்களின் வேண்டுதல் எல்லாம் தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என்பதே.. ஜனாதிபதி கொடுத்த நம்பிக்கையில் புத்தாண்டுக்கு அப்பா வருவார் என எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றார்கள்.

மூத்த மகன் கனிதரன் தான் ஒரு மென்பொருள் பொறியியலாளனாக வர வேண்டும் என்பதே இலக்கு என நம்பிக்கையுடன் கூறுகிறான். இளைய மகள் சங்கீதா தான் ஒரு வைத்தியராக வேண்டும் என்பதே தனது இலக்கு என்கிறாள்.

” அம்மா இருக்கும் வரை அவா தான் எங்களை சைக்கிளில் ஏற்றிக்கொண்டே ஸ்கூலில விடுவா , இரவில பாடம் சொல்லிக்கொடுப்பா , இப்ப அம்மா இல்லை. நாங்கள் அம்மாம்மாவுடன் தான் இருக்கிறோம். அவாக்கு ஏலாது இப்ப எங்களை ஸ்கூலில கொண்டே விட யாரும் இல்லை. இரவில பாடம் சொல்லிக்கொடுக்கவும் யாரும் இல்லை. எங்கட அப்பாவை விட்டால் அவரோட நாங்கள் ஸ்கூலுக்கு போவோம். இரவில பாடம் சொல்லிக்கொடுப்பார். எங்களுக்கு எங்கட அப்பாவை விட்டா நாங்க நல்லா படிப்போம் என்கிறார்கள்” கனியும் சகீயும்.

“அவள் இருக்கும் வரையில் ஏதோ தைச்சு கொடுத்து உழைச்சு பிள்ளைகளை பார்த்தால் இப்ப எனக்கும் ஏலாது என்னென்று இந்த பிஞ்சுகளை ஆளாக்க போறேனோ தெரியா ..இப்ப இரவில திடீர் திடீரென மூத்தவன் எழும்பி தாயின் ஞாபகத்தில அழுவான். அவன் அழுகிறதை பார்த்து இவளும் அழ தொடங்கிடுவாள். இரண்டு பேரையும் சமாதானபடுத்த என்னால் முடியாது உள்ளது. பிள்ளைகளில் தகப்பனை விட்டா அவர் தன் பிள்ளைகளை பார்ப்பார். ” என கண்ணீருடன் கூறுகிறார் யோகராணியின் தாய்.

அந்த பிஞ்சுகள் தமது இலக்கினை அடைய , அந்த பிஞ்சுகளின் வேண்டுதல்களுக்கு செவி சாய்க்கப்படுமா ?? மலரவிருக்கின்ற தமிழ் சிங்கள புத்தாண்டில் அந்த பிஞ்சுகள் தந்தையுடன் சேருவார்களா ? ஜனாதிபதி அதற்கு வழிசமைத்து கொடுப்பாரா ?