ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்! (Video)


அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.

ஜனாதிபதியின் வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது தமது தந்தையை விடுதலை செய்யுமாறு, ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன், அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களும் ஜனாதிபதியிடம் இன்று கையளிக்கப்பட்டன.

ஜனாதிபதி தம்மிடம் தமது தந்தையை விடுவிப்பதாகத் தெரிவித்ததாக ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் குறிப்பிட்டனர்.

சச்சிதானந்தம் ஆனந்த சுதாகர், 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 9 வருடங்களாக மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

ஆனந்த சுதாகரை மனைவியின் மரணச் சடங்கிற்கு அழைத்து வந்திருந்த போது, அவரின் மகள் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிச்செல்ல முயற்சி செய்திருந்தனர்.


Get real time updates directly on you device, subscribe now.

You might also like