மஸ்கெலியாவில் ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவானார்!

மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு மத்திய மாகாண உள்ளூராட்சி ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று ஆரம்பமானது.

இதன்போது, அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகைதராமையின் காரணத்தால் கறுப்பு பட்டி அணிந்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இந்நிலையில், அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இதனைமையப்படுத்தி ஏற்பட்ட அமைதியற்றத் தன்மைக்கு மத்தியிலும் சபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் உறுப்பினர் செம்பகவள்ளி தலைவராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியுள்ளது. இக்கல்வீச்சில் சிலர் சிறு காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கல்வீச்சி காரணமாக பொதுபோக்குவரத்து தடைப்பட்டதுடன் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் நிலையங்களிலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.