ரசிகர்களுக்கு முக்கியத்துவம் தந்த விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் விஜய், படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி திரைப்படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் நிறுத்திவைத்துள்ளனர் படக்குழுவினர். தயாரிப்பாளர்கள் ஒருமனதாக எடுத்துக்கொண்ட முடிவுக்குச் சம்மதம் தெரிவித்து அஜித்தும் தனது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்திருக்கிறார். ஆனால், விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று தொடர்ந்து நடைபெற்றது. இதன் காரணமாக தயாரிப்பாளர்களும் திரைப் பிரபலங்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை, விக்டோரியா ஹாலில் நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 22) சென்னை, சென்ட்ரல் பகுதிகளில் நடைபெற்றது. இந்த செய்தியறிந்த ரசிகர்கள் அங்கு கூடிவிட்டனர். இதை அறிந்த விஜய் படப்பிடிப்புக்கு மத்தியில் ரசிகர்களைச் சந்தித்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

படத்தைத் தீபாவளி தினத்தன்று வெளியிட இருப்பதாக இயக்குநர் முருகதாஸ் தெரிவித்திருந்ததால் ஆகஸ்ட் மாதத்துக்குள் படப்பிடிப்பை முடிக்கும் திட்டத்தில் இருக்கின்றனர். தற்போது வரை படத்தின் 40 சதவிகிதப் படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like