பறித்த வாய்ப்பை மீண்டும் வழங்குமா மழை?

கிரிக்கெட் உலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று (மார்ச் 22) நடைபெற்ற போட்டியில் ஜிம்பாவே அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க வேண்டி 10 அணிகளுக்கு இடையே தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் வெற்றி பெற்று முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும். அதற்காக நடத்தப்படும் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து சூப்பர் சிக்ஸ் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதுவரை மேற்கிந்தியத் தீவுகள் அணி மட்டும் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மற்றொரு அணி எது என்பது இன்று நடைபெறவிருக்கும் அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாவே அணி, யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் முதலில் பேட் செய்த யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி 47.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களைச் சேர்த்திருந்த பொழுது மழை குறுக்கிட்டது. எனவே போட்டி இரண்டு மணி நேரம் தடைபட்டது . மீண்டும் போட்டி தொடங்கும் போது 40 ஓவர்களில் 230 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் ஜிம்பாவே அணி களமிறங்கியது.தொடக்க வீரர்கள் இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர். பின்னர் சேன் வில்லியம்ஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கியதால் ஜிம்பாவே அணி வெற்றி இலக்கை நோக்கி சென்றது. ஆனால் அவரும் 80 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி வீரர்களின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் திணறினர்.

கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற நிலையில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி வீரர் நவீத் சிறப்பாகப் பந்து வீசி 11 ரன்களை மட்டுமே வழங்கினார். இதனால் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் உலகக் கோப்பைக்கு ஜிம்பாவே தகுதி பெறுவது கேள்விக்குறியாகி உள்ளது. 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ள ஜிம்பாவே அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வேண்டுமெனில், இன்று அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட வேண்டும். ஏனெனில் இரண்டு அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் தரவரிசையில் உள்ளனர். இதில் எந்த அணி வெற்றி பெற்றாலும், இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதோடு உலகக் கோப்பை தொடருக்கும் செல்லும். எனவே ஜிம்பாவே அணியினர் மழை வருமா என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.