யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தியோரின் குற்றச்சாட்டை மறுக்கிறது சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு

யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைச் சந்திக்க மறுத்து விட்டார் என்று வெளியான செய்திகளை சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு ஆதாரங்களுடன் மறுத்துள்ளது.

கடந்த 19ஆம் நாள், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடந்த விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்றிருந்த போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் எங்கே என்று, கேள்வி எழுப்பி நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில், ஈடுபட்டவர்களின் சார்பில், மூன்று பேரை காவல்துறையினர் சிறிலங்கா அதிபரைச் சந்திப்பதற்காக அழைத்துச் சென்றனர்.

அருட்தந்தை சக்திவேல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின், யாழ். மாநகரசபையின் பிரதி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட தீபன் திலீசன், மற்றும் காணாமல் போனோரின் உறவினர்களின் சார்பில் பெண் ஒருவர், சிறிலங்கா அதிபரை சந்திக்க சென்றனர்.

அவர்கள் திரும்பி வந்து, தம்மை சிறிலங்கா அதிபர் சந்திக்கவில்லை என்றும், அவர் ஏமாற்றி விட்டதாகவும் கூறியதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விசனத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்தநிலையில், காணாமல் போனோரின் உறவினர்களைச் சந்திக்காமல், சிறிலங்கா அதிபர் புறக்கணிக்கவில்லை என்றும், அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டமிடப்படாத அந்தச் சந்திப்பு தொடர்பான படம் ஒன்றையும், அதுபற்றிய ஊடக அறிக்கை ஒன்றையும் அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.