ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கைப் பிரேரணை – 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணை ஒன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் 80இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

ஐதேக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்திலேயே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் மீது நம்பிக்கை தெரிவிக்கும், பிரேரணையில் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

இதில் 80இற்கும் அதிகமான ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், எனினும், 80இற்கும் அதிகமானோரின் கையெழுத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரேரணையில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன்,மனோ கணேசன், திகாம்பரம், உள்ளிட்டோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை, மீது எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் நாள் நடக்கும் வாக்கெடுப்பின் போது அதனை தோற்கடிப்பதென்றும் இந்தக் கூட்டத்தில் ஒருமனமதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பிரதமர் ரணிலுக்கு ஆதரவாகப் பெறப்பட்ட நம்பிக்கைப் பிரேரணை விரைவில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று ஐதேக உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் உள்ள ஐதேக உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் ரணிலுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளதாக ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கூறியுள்ளார்.