90 நிமிடங்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து!

நியூசிலாந்திற்கு எதிராக இன்று (மார்ச் 22) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 58 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் 3-2 என இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட் மாற்றம் டிம் சவுதியின் பந்து வீச்சினை தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கினர். போட்டி தொடங்கிய 90 நிமிடத்திற்குள் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி 20.4 ஓவரில் 58 ரன்களை மட்டுமே சேர்த்தது. டிரென்ட் போல்ட் 32 ரன்களை வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் சவுதி 25 ரன்களை வழங்கி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி 58 ரன்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இது ஒட்டுமொத்தமாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறாவது குறைந்தபட்ச ஸ்கோர் மற்றும் ஆக்லாண்ட் மைதானத்தில் இரண்டாவது குறைந்தபட்சமாகும். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணி நிதானமாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கியது. தொடக்க வீரர்கள் ஜீட் ரவல் (3) மற்றும் டாம் லேதம் (26) இருவரும் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆனால் நிலைத்து நின்று விளையாடிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட் சரிவிலிருந்து காப்பாற்றினார்.