மணியந்தோட்ட சம்பவம் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம்

மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த சிறப்பு அதிரடிப்படையினரின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இருவரையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.

2017ஆம் ஆண்டு ஒக்ரோபர் 22ஆம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ டினேசன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.

இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த நவம்பர் மாதம் 3ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படை முகாமில் கடையாற்றிய மல்லவ ஆராய்ச்சிகே பிரதீப் நிசாந்த மற்றும் ரத்நாயக்க முதியான்சலாகே இந்திக புஸ்பகுமார ஆகிய சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அன்றிலிருந்து சுமார் 5 மாதங்களாக யாழ்ப்பாணம் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சார்பில் சட்டத்தரணி மோகனதாஸ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

அதன் மீதான கட்டளை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் இன்று வழங்கப்பட்டது.

“சந்தேகநபர்கள் இருவரும் 50 ஆயிரம் ரூபா பணத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வைப்பிலிடவேண்டும்.

சந்தேகநபர்கள் இருவருக்கும் தலா 5 லட்சம் பெறுதியிடைய 2 ஆள் பிணையாளிகள் கையொப்பமிடவேண்டும்.

ஆள் பிணையாளிகள் நீதிவானால் அனுமதிக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சந்தேகநபர்கள் இருவரும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடவேண்டும்.

வெளிநாடு செல்லத் தடை” ஆகிய நிபந்தனைகளின் கீழ் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பிணை வழங்கிக் கட்டளை வழங்கினார்.

Get real time updates directly on you device, subscribe now.