பாடசாலை மாணவர்கள் போராட்டம்

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் பிரதான நுழைவாயில் முன்பாக உயர்தர மாணவர்கள் இன்று காலை பாடசாலை நேரத்தின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அதிபர் வெளியேறு, பள்ளி மாணவர்களை அச்சுறுத்தும் காட்டு மிராண்டியை வெளியேற்று, தகுதியற்ற அதிபரை வெளியேற்றுக, மாணவர்களைப் பாதுகாப்போம் போன்ற வசனங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறும் கோசமிட்டவாறும் முன்வாயிலில் இருந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது விடயமாக தெரியவருவதாவது,
இப்பாடசாலையின் அதிபருக்கும் உயர்தர மாணவனுக்குமிடையில் நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்ற வாக்குவாதத்தின் பின்னணியே இவ் ஆர்ப்பாட்டத்திற்கான காரணமாகும்.

இவ்வார்ப்பாட்டத்தின் போது அக்கரைப்பற்று பொலிசாரும் அவ்விடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ்விடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

குறித்த சம்பவம் கேள்வியுற்றபோது, உடனடியாக பாடசாலைக்கு விஜயம் செய்து பாடசாலை நிர்வாகத்தினரைச் சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் கேட்டறிந்ததன் பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் சென்று அவர்கள் தொடர்பான பிரச்சினையை கேட்டதன் பின்னர் அவர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதன் பின்னர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களின் பிரச்சினைகள் எல்லாவற்றையும் தனித்தனியே எழுத்து மூலம் அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.கஸ்ஸாலியிடம் முன்வைக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் மாணவர்கள் மத்தியில் வழங்கிய வாக்குறுதியின் நிமித்தம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்று தங்களின் வகுப்பறைகளுக்கு சுமார் 10.25 மணியளவில் சென்றதாகவும் கூறினார்.

இது பற்றி அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் தெரிவிக்கையில்,

பாடசாலைக்கும், ஆசிரிய சமூகத்திற்கும் விரோதமாக செயற்படும் மாணவர்களின் நடவடிக்கையை ஒரு போதும் அங்கிகரிக்க முடியாது. அவ்வாறு செயற்படும் ஒரு சில மாணவர்களினது செயற்பாடுகள் பாடசாலையின் கல்வி நடவடிக்கைக்கும், நற்பெயருக்கும், பாரிய தடையாக அமையும்.

இப்பாடசாலையில் 180க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி பயின்று வருகின்றனர். சிறந்த திறமையும், நற்பண்பும் கொண்ட, ஒழுக்கசீலர்களாக அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைக்கும், பாடசாலை சமூகத்திற்கும் நற்பெயருடன் செயற்பட்டு வருகின்றனர்.

இம்மாணவர்களில் சிலர் நிபந்தனையின் அடிப்படையில் குறைந்த தகைமைகளுடன் க.பொ.த.உயர்தரத்தில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களில் 15 பேர் மட்டுமே பாடசாலைக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கும் அபயகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.

பாடசாலைக்கென்று கட்டுப்பாடுகளும் ஒழுக்க விழுமியங்களும் இருக்கின்றன. அதனை மீறி மாணவர்கள் காடையர்களாக செயற்படுவதற்கு நான் ஒருபோதும் அங்கிகாரம் வழங்க முடியாது.

ஆசிரியர்களை அச்சுறுத்துவதற்கும், ஏனைய மாணவிகளை கிண்டல் செய்வதற்கும், பாடசாலை வேளையில் ரீசேட், கலர் சேட் அணிவதற்கும் பாடசாலை நிர்வாகம் துணைபோக முடியாது.

இவ்வாறு மிக மோசமான செயற்பாடுகளில் இருந்த மாணவர் ஒருவரை பாடசாலை நிர்வாகம் விசாரணை செய்து அவரை எச்சரித்த போதே குறித்த மாணவன் தன்னை தாக்கயதாக பொய்யான வதந்தியைப் பரப்பி ஏனைய மாணவர்களையும் அழைத்து இவ்வாறு செயற்பட்டு வருகின்றார் என அவர் மேலும் தெரிவித்தார்.