உலகத்தில் விடுதலைப் புலிகளே முதன்மையான இயக்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், உலகத்திலேயே முதன்மையான பயங்கரவாத இயக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் கடந்த 30 வருடங்களாக ஏற்பட்ட பேரழிவுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே பொறுப்புக் கூறவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களின் எண்ணிக்கை, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், விடுதலைப் புலிகளினால் அழிக்கப்பட்டவை உள்ளிட்ட கேள்விகளை, உள்நாட்டலுவல்கள் அமைச்சரிடம் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கயந்த கருணாதிலக்க,

“மொத்தமாக 1,046 நிறுவனங்கள் இருந்தன. அதில், 104 நிறுவனங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அன்றைய காலத்திலிருந்த நெருக்கடியான நிலைமை மற்றும் சிவில் நிர்வாகம் சீர்குலைந்திருந்தமையால், இழப்பீடுகளை மதிப்பிடமுடியவில்லை” என குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர,

“உலகிலேயே விடுதலைப் புலிகள் இயக்கமே முதன்மையான பயங்கரவாத இயக்கமாகும். அந்த இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இழப்பீடுகளை அரசாங்கங்கள் மதிப்பீடு செய்திருக்கவேண்டும்.

எனினும் எந்தவொரு அரசாங்கமும் அதனை செய்யவில்லை.

கடந்த 30 வருடங்களில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட இழப்புகளுக்கு, புலிகளே பொறுப்புக் கூறவேண்டும். எனினும், இராணுவத்தினர் மனித உரிமைகளை மீறிவிட்ட​னரென, ஜெனீவாவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கை, பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. அவற்றை வைத்து, எந்தவொரு அரசாங்கமும் மதிப்பீடு செய்யவில்லை” என குறிப்பிட்டார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like