ரணிலும் சம்பந்தனும் ரகசிய சந்திப்பு…?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின் படி நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெற வேண்டுமானால் 113 சாதாரண பெரும்பான்மை பெறப்பட வேண்டும்.

ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கவில்லையானால் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியாது என கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பிரதமர் ரணில் உட்பட, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர் சம்பந்தனுடன் கலந்துரையாடியுள்ளனர் என்று கட்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 54 பேர் உள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் 42 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் 16 பேரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் 6 பேரும் உள்ளனர். ஐக்கியதேசியக் கட்சியில் 106 பேர் உள்ளனர். எனவே சபாநாயகரை தவிர்த்து மொத்தமாக 224 உறுப்பினர்கள்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், சபாநாயகருக்கு இரண்டு வாக்குகள் உள்ளன. ஆனால் சபாநாயகர் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்களிப்பார் என்று கூற முடியாது.

இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தால் மாத்திரமே பிரேரணை வெற்றிபெறக் கூடிய வாய்ப்பு உள்ளது.

அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் உள்ள 42 உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் கூற முடியாது.

ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவில் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனாலும் கட்சியின் தீர்மானத்தை மீறி அவருக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாது.

இந்த நிலையில் பிரேரணை தோல்வியடையும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் கூறினார்.

நல்லாட்சி அரசாங்கத்தில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது நம்பிக்கையில்லா பிரேரணை என்பது குறிப்பிடத்தக்கது.