தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும் – ஜெனிவாவில் சுகாஸ்

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்து வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களது நீண்ட கால இனப்பிரச்சனை தொடர்பில் காலத்தை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை என சட்டத்தரணியும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் அமைப்பாளருமான க.சுகாஷ் தெரவித்துள்ளார்.

ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றி பிரதான அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,
இலங்கையில் அரங்கேறிய கொடூர இனவழிப்பின் விளைவாக ஈழத்தமிழினம் அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக பாதிக்கப்பட்டு தற்போது வீதிகளிலே தங்கள் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு பாகமான வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்ட 147,000 அப்பாவி தமிழ் மக்களின் நிலை இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஆளும் அரசாங்கங்கள் காலத்தை கடத்தும் உத்தியை கையாளுகின்றனரே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க முன்வரவில்லை.

இலங்கையில் உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலம் ஒரு கண்துடைப்பே தவிர அது பாதிக்கப்பட்டோருக்கு ஒருபோதும் நீதியை வழங்கப்போவதில்லை.

கடத்தப்பட்டவர்கள் மற்றும் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கையறு நிலையில் அனைவரிலும் நம்பிக்கை இழந்து கடைசிக்கட்டமாக தமக்கான நீதியைத் தாமே தேடி கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக வீதிகளிலே இறங்கி சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் போராடிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் அவர்களின் ஜனநாயக்கோரிக்கைக்கு இற்றைவரை இலங்கை அரசிடமிருந்து சாதகமான பதிலெதுவும் கிடைக்கவில்லை.

வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதலை குற்றமாக்கும் வகையில் உருவாக்கப்படும் சட்டங்கள் கூட கடந்த காலத்தில் இடம்பெற்ற காணாமலாக்கப்பட்ட சம்பவங்களை உள்ளடக்காது

எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் சம்பவங்களை மட்டுமே ஆராயக்கூடிய வகையில் சர்வதேசத்தையும் பாதிக்கப்பட்டோரையும் ஏமாற்று வகையில் கொண்டுவரப்படுகின்றது.

எனவே இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு எவ்வித விமோசனமும் கிடைக்கப்போவது கிடையாது.

இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

தொடர்ச்சியாக மனித உரிமைகளை மீறி வருவதனால் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேசமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் அங்கீகரிக்கின்ற அதேவேளை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் முகமாக சர்வதேச விசாரணைக்கான கதவுகளை திறக்க வேண்டும்.

யுத்தம் நிறைவுக்கு வந்து 9 வருடங்கள் ஆகின்றன. ஆனால் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு இற்றைவரை நீதியுமில்லை – நிவாரணமுமில்லை.

“தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதியாகும்” என்ற இயற்கை நீதிக் கோட்பாட்டிற்கமைய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இனியும் காலந்தாழ்த்தாமல் ஈழத்தமிழர் விவகாரத்திற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.