ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – கூட்டு எதிரணிக்குள் பிளவு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டு எதிரணியினரின் கையெழுத்தைப் பெற முன்னர், அரச தரப்பில் உள்ளவர்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பொறிக்குள் கூட்டு எதிரணி சிக்கிக் கொள்ளக் கூடாது என்றும், ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கினால், அடுத்த பிரதமராக யாரை நியமிப்பது என்ற முடிவை எடுக்காமல் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரக் கூடாது என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

தோல்விடையக் கூடிய நிலையில் நம்பிக்கையில்லா பிரேரைணையை முன்வைக்கக் கூடாது என்றும் மகிந்தவுக்கு நெருக்கமானவர்களான பிரசன்ன ரணதுங்க, நிமால் லான்சா, குமார வெல்கம, ரமேஸ் பத்திரன போன்றவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் தாம் கையெழுத்திடப் போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே நம்பிக்கையில்லா பிரேரணையில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, கூட்டு அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களான தயாசிறி ஜெயசேகர, சந்திம வீரக்கொடி போன்றவர்களும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.