ஜனாதிபதியின் உயிரை காப்பாற்றிய தமிழ் மக்கள்?

தமிழ் பேசும் மக்கள் தனது உயிரை காப்பாற்றியுள்ளனர் என ஜனாதிபதி கூறியிருந்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திக்கு அப்பால் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்வதற்காக இன்றுவரையில் போராடிக்கொண்டுள்ளது.

2001ஆம் ஆண்டு தமிழர்களின் ஒருமித்த குரலாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்களின் ஒரே குரலாக இன்று ஜெனீவா வரையில் ஒலித்து வருகின்றது.

2015ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஒரு கொடூர ஆட்சியை மாற்றி நல்லாட்சி என்ற ஒன்றை கொண்டு வந்தோம். கடந்த மூன்று வருடத்தில் தமிழ் மக்கள் நினைத்து எதுவும் அந்த ஆட்சியில் நடக்கவில்லை.

நேற்று முன்தினம் கூட யாழ் சென்ற ஜனாதிபதி நன்றி மறப்பவன் நான் இல்லையென கூறியுள்ளார். ஆனால் அவரின் இந்த மூன்று வருட ஆட்சிக்காலத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையினையும் அவர் எடுக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் ஆனந்த சுதாகரன் என்ற அரசியல் கைதியின் இல்லத்தில் நடந்த சம்பவம் அனைத்து தமிழர்களையும் இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்தது.

விமல் வீரவன்ச பெரும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டபோது அவரது மகள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார் என்ற காரணத்திற்காக அவர் விடுதலை செய்யப்படும் போது தாயை இழந்த இரு குழந்தைகளின் கண்ணீரைப் பார்த்த அந்த ஜனாதிபதி ஆனந்த சுதாகரனுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்.

அனைத்து தமிழ் மக்களும் இணைந்தே தன்னை ஜனாதிபதியாக்கியதாகவும், தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறாவிட்டால் தனது நிலை என்னாகியிருக்குமோ என்றும், தமிழ் பேசும் மக்கள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார்கள் என்றும் கூட ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்கும் வரையில் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இருந்து பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.