யாழ். மத்திய கல்லூரிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி!

அபிநாஸ் தனியாளாக துடுப்பாட்டத்தில் கலக்கியதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயற்பட 16 ஆவது வடக்கின் மாபெரும் போர் ஒருநாள் போட்டியில், சென்.ஜோன்ஸ் கல்லூரி 66 ஓட்டங்களால் வென்றது.

வடக்கின் மாபெரும் போர் பெருந்துடுப்பாட்ட போரில் மோதுகின்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் இடையிலான ஒருநாள் போட்டி 17 ஆம் திகதி சனிக்கிழமை சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்.ஜோன்ஸ் அணித்தலைவர் வசந்தன் யதுசன் முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தார். ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. சென்.ஜோன்ஸ் அணி 41 ஓட்டங்களைப் பெற்ற போது, தேவதாஸ் செரோபன் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 56 ஓட்டங்கள் இருக்கையில், 23 ஓட்டங்களுடன் நாகேந்திரராஜா சௌமியன் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஜோடி சேர்ந்த முர்பின் அபிநாஸ் – சுபீட்ஸன் ரிப்பியுஸ் அணியை திடமான நிலைக்கு கொண்டு சென்றனர். அபிநாஸ் அரைச்சதம் கடந்தார். இவர்கள் இருவரும் தமக்கிடையில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்த போது, 28 ஓட்டங்களைப் பெற்ற சுபீட்ஸன் ரிப்பியுஸ் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த அணித்தலைவர் யதுசன் 8 ஓட்டங்களுடன் வெளியேறினார். தெய்வேந்திரம் டினோசன், அபிநாஸ{டன் இணைந்து அணியை 200 ஓட்டங்கள் கடக்க வைத்தார். அபிநாஸ் 84 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். டினோசன் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்தவர்கள் களத்தில் நிலைக்காமையால், சென்.ஜோன்ஸ் அணி, 47.5 ஓவர்களில் 233 ஓட்டங்களைப் பெற்றுச் சகல விக்கெட்களையும் இழந்தது.

பந்துவீச்சில் சூரியகுமார் சுஜன் 9 ஓவர்கள் பந்துவீசி 39 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், செல்வராசா மதுசன் 9.5 ஓவர்கள் பந்துவீசி 47 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், கமலராசா இயலரசன் 9 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், சிவலிங்கம் தசோபன் 10 ஓவர்கள் பந்துவீசி 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

234 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, முதல் விக்கெட்டை 38 ஓட்டங்களுக்கு இழந்தது. அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்களை அடுத்தடுத்து, இழந்தமையால் வெற்றியை நோக்கி ஒரு அடிகூட நகரமுடியாமல் திணறியது. எந்தத் துடுப்பாட்ட வீரர்களும் அணியை வெற்றிநோக்கி அழைத்துச் செல்லாமல் பவிலியன் நோக்கிச் சென்றனர்.

42.4 ஓவர்களில் யாழ்ப்பாணம் மத்தி 167 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் கமலராசா இயலரசன் 25, செல்வராசா மதுசன், சிவலிங்கம் தசோபன், சிறிஸ்கந்தராசா கௌதமன் ஆகியோர் தலா 24 ஓட்டங்களையும், அன்ரனிதாஸ் ஜெயதர்சன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் அணி சார்பாக, நாகேந்திரராஜா சௌமியன் 8 ஓவர்கள் பந்துவீசி 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும், தெய்வேந்திரம் டினோசன் 9 ஓவர்கள் பந்துவீசி 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், முர்பின் அபிநாஸ் 8.4 ஓவர்களில் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஒருநாள் போட்டியின் ஆட்டநாயகனாக சென்.ஜோன்ஸ் அணியின் முர்பின் அபிநாஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் சென்.ஜோன்ஸ் அணி, வெற்றி எண்ணிக்கையை 9 ஆக அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இதுவரையில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது.

படங்கள் – ஐ.சிவசாந்தன்