யாழ் வலிகாமம் கல்வி வலய பாடசாலைகளின் தற்போதைய நிலை

யாழ் வலிகாமம் கல்வி வலயத்தில் புதிதாக மக்கள் மீள் குடியேற்றம் இடம்பெற்ற பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளின் தற்போதைய நிலைமை,தேவைகள் குறித்து வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தலைமையில் கள ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
வலிகாமம்கல்வி வலயத்தில் ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயம், ஊரணி கனிஸ்ட வித்தியாலயம், தையிட்டி கனேசா வித்தியாலயம், தையிட்டி சிவகுருநாதர் வித்தியாலயம், ஒட்டகப்புலம் றோ.க.த.க பாடசாலை உள்ளிட்ட ஐந்து பாடசாலைகள் கள ஆய்வுப்பணி மூலம் தற்போதைய நிலை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீளக்குடியமர்ந்த பாடசாலைகளின் எல்லைகளுக்கு அருகில் இராணுவ முகாம்கள் காணப்படுவதுடன் பாடசாலைகளுக்கு எந்தவித மறைப்புக்களும் இல்லாமல் திறந்த வெளியாக காணப்படுவதும் ஆய்வுப்பணியின் போது கண்டறியப்பட்டு அவற்றுக்கான மறைப்பு வேலிகளை அமைத்து மாணவர்களின் இயல்பான கற்றல் செயற்பாட்டிற்கு வளியமைக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.அதேவேளை பாடசாலைச் சூழல் பற்றைகளாலும்,கற்பாறைகளினாலும் நிறைந்து இருப்பதால்,அவற்றை அப்புறப்படுத்துவதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் இருந்து உதவிகளைப் பெற்றுக் கொள்ளுமாறும் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இராணுவக் கட்டுப்பட்டில் இருந்து 2017 மே மாதத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒட்டகப்புலம் றோ.க.த.க.பாடசாலை மற்றும் 2018 ஆம் அண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஏனைய பாடசாலைகள் தற்போது போதிய அடிப்படை வசதிகளற்ற நிலையில் இயங்கிக்கொண்டிருப்பது ஆய்வுப்பணி மூலம் கண்டறியப்பட்டு உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்களை உடன் அமுலுக்கு வரும்வகையில் நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
மேற்குறித்த பாடசாலைகள் நீண்ட காலம் இயங்காத காரணத்தினாலும் போர் காரணமாகவும் பாடசாலைகளின் பெரும்பாலான கட்டிடங்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுவதால் குறித்த பாடசாலைகளுக்குத் தேவையான கட்டிடங்கள்,தளபாடங்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொடுப்பதற்கான மதிப்பீடுகளை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
நேற்றைய கள ஆய்வுப்பணியில் கல்வி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ந.அனந்தராஜ், மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர் பிரேமகாந்தன், திட்மிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் அன்ரனி, வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையின் தொழில் நுட்ப அலுவலர்; மற்றும் கல்வி அமைச்சின் பாடசாலைகள் வேலைகள் பணிப்பாளர் சுரேஸ் ஆகியோர் இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வடக்கு மாகாண மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை உயர்த்தும் நோக்கில் எதிர்வரும் நாட்களில் பாடசாலைகளில் இவ்வாறான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.