முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை

வட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.

கடந்த 7ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் வட்அப், வைபர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு வைபர் மீதான தடையும், நேற்று நள்ளிரவு வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்பட்டது.

இந்தநிலையில், முகநூல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலர் நேற்று கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் இன்று சிறிலங்கா அதிபரின் செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னான்டோவுடன், முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

முகநூலில் இனவெறுப்பை தூண்டும் கருத்துக்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.

இந்தப் பேச்சுக்களில் தேவையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இணங்கினால், குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடைகள் நீக்கப்படும் என்று ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.