பௌத்த விகாரையை நிர்மாணிக்க தமது சொந்தக் காணியை வழங்கிய தமிழர்!!

புபுரஸ்ஸ பகுதியில் பௌத்த விஹாரை ஒன்றுக்கு தனது காணியை தமிழர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.சுப்ரமணியம் என்ற வர்த்தகரே இவ்வாறு தனது காணியை வழங்கியுள்ளார்.

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றும், சொத்துக்காக சகோதர சகோதரிகளுடன் மோதிக் கொள்ளும் சூழ்நிலையில் தமிழர் ஒருவரால், பௌத்த விஹாரைக்கு அன்பளிப்பாக காணி வழங்கப்பட்டமை சிங்கள ஊடகங்களில் போற்றப்பட்டுள்ளன.

விஹாரை ஒன்றை அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாறு காணியை வழங்கி சுப்ரமணியம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தி சிங்கள இனத்திற்கு நல்ல ஓர் முன்னுதாரணத்தை வழங்கியுள்ளதாக கெலி ஓய தெலம்புகல நீக்ரோதசைத்திய பிரிவெனவின் பீடாதிபதி கொடமுன்னே பஞ்ஞாகீத்தி தேரர் தெரிவித்துள்ளார்.குறித்த காணியில் அமைக்கப்பட்ட தர்மசாலை அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் உரை நிகழ்த்தும் போது ;

30 ஆண்டு கால யுத்தத்தில் நாம் உயிர்களை அழித்துக் கொண்டோம். அவ்வாறான ஓர் காலச் சூழலில் இவ்வாறான மனிதர்கள் நாட்டுக்கு பெரும் சொத்தாகும். சிறுவர் முதல் பெரியோர் வரையில் விஹாரைக்கு வருகை தருகின்றனர்.விஹாரைகள் மூடப்பட்டு வரும் நிலையில் விஹாரைகளை பாதுகாக்க வேண்டியது சிங்கள பௌத்தர்களின் கடமையாகும்.

சிங்கள இனம் அழிவடைந்து வரும் நிலையில், நாடு அழிவடைந்து செல்லும் நிலையில் நாம் சிங்கள மக்கள் என்ற வகையில் இருக்கும் ஒரே பாதுகாப்பு பௌத்த மதத்தை பாதுகாப்பதாகும். அனைவரும் இணைந்து செயற்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.