இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம் திறந்துவைப்பு!

இலங்கையின் முதலாவது செயற்கை புற்தரை கால்பந்து மைதானம், கோட்டே-பெத்தனானவில் உள்ள இலங்கை கால்பந்து பயிற்சி மையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.அத்துடன் குறித்த மைதான வளாகத்தில் 40 கால்பந்து வீரர்கள் 15 அதிகாரிகள் தங்கியிருந்து பயிற்சிகளை பெறுவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதுதவிர வீரர்களுக்கான விடுதி உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கேட்போர் கூடமும் இங்கு உள்ளன.

இதேபோன்று ஏனைய மாவட்டங்களிலும் செயற்கை புற்தரை கால்பந்து மைதானங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் ஏழரைக் கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மைதானத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் நிதியுதவி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கால்பந்து விளையாட்டுக்கான மோகமும் இளம் வீரர்களின் வளர்ச்சியும் பேசுபொருளாகியுள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு உகந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த மைதானம் வீரர்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.