யாழில் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்பட்ட கட்டடம் பொலிஸ் வசம்!

1

யாழ். நடேஸ்வரா கல்லூரி 25 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் பாடசாலைக்கு சொந்தமான கட்டடமொன்றும் கிணறும் தொடர்ந்தும் பொலிஸாரின் பயன்பாட்டில் உள்ளதாக மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 118ஆவது அமர்வின்போது விசேட கவனயீர்ப்பு பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

சபையில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ”உயர்பாதுகாப்பு வலயங்கள் தளர்த்தப்பட வேண்டும். படையினர் வெளியேற்றப்பட வேண்டும். பாடசாலைகள், ஆலயங்கள் மக்களிடம் கொடுக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள். அதன் பயனாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த 16 பாடசாலைகளில் 8 பாடசாலைகள் இந்த ஆட்சிக்காலத்தில் விடுவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், போராடிப் பெற்ற பாடசாலைகள் எவற்றிற்கும் தளபாடங்கள் இல்லை. அவற்றில் மூன்று பாடசாலைகளில் ஆசிரியர்கள் இல்லை. உயர்பாதுகாப்பு வலயத்தை தளர்த்து, படையினரே வெளியேறு என போராட்டம் நடத்தி பாடசாலைகளை விடுவித்துக்கொண்டு, அவற்றிற்கு எவ்வித வசதிகளையும் செய்துக் கொடுக்காமல் இருப்பது வெட்கக் கேடான விடயமாகும்.

அதுமாத்திரமின்றி, எங்களால் செய்யக்கூடிய விடயங்களை கூட செய்யாமல் இருப்பது பாரிய குற்றமுமாகும். வலிகாமம் வலயத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் மேலதிகமாகக் காணப்படுகின்றனர்.

அவர்களை இந்த பாடசாலைகளுக்கு நியமியுங்கள். அவர்கள் மாணவர்களுக்கு கல்வியை போதிக்காவிட்டாலும் பரவாயில்லை. மாணவர்களுக்கு பாதுகாப்பாகவேனும் இருக்கட்டும். குறித்த விடயங்கள் தொடர்பாக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், மேற்படி பாடசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என உறுதியளித்தார்.