சர்வதேசத்தின் தலையீடு அவசியம்!

இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு என்பது அச்சம் நிறைந்ததாகவே இருந்து வருகிறது.

இந்நிலைமை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. மாறாக இலங்கை சுதந்திரம் அடைந்து சிங்களத் தரப்பிடம் ஆட்சி அதிகாரம் கையளிக்கப்பட்டதில் இருந்து சிறுபான்மை இன மக்கள் பேரினவாதப் பேய்க்கு இரையாகி வருவது தொடர்கிறது.

சில சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களே இனவன்முறையை தூண்டி விட்டுள்ளனர். இதற்கு 1983 ஜூலைக் கலவரம் தக்க சான்றாதாரமாகும்.

பேரினவாதிகள் தமிழ் மக்களைக் கொன்று துவம்சம் செய்த போதெல்லாம் படைத் தரப்பினர் நின்று வேடிக்கை பார்த்தனர் என்பது நிதர்சனமானது.

இதுதவிர கடந்த முப்பது ஆண்டு கால யுத்தத்தின்போது அரச படைகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளை நோக்கி எறிகணை வீச்சுகளை நடத்தியும் விமானம் மூலம் குண்டுகளை வீசியும் தமிழ் மக்களைக் கொன்றழித்தனர்.

இதன் உச்சக்கட்டமாக வன்னிப் பெருநிலப் பரப்பில் தமிழின அழிப்பு நடந்தேறியது.

எக்காலத்திலும் இலங்கையில் தமிழ் மக்கள் எழுகை பெறக்கூடாது என்ற அடிப்படையில், வன்னி யுத்தம் நடத்தப்பட்டதுடன், சுமார் மூன்று லட்சம் தமிழ் மக்கள் முட்கம்பி வேலிகளுக்குள் அடைக்கப்பட்டு மிக மோசமாக நடத்தப்பட்டனர். இவை இலங்கையில் நடந்த இன வன்மத்தின் பதிவுகள்.

இப்போது கண்டியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறை நடந்துள்ளது. பொலிஸாரையும் படையினரையும் ஈடுபடுத்தியும் கலவரத்தை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என்றால்,இலங்கையில் உள்ள சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பு யார் கையில் என்ற கேள்வி எழுவது நியாயமானதே.

முப்பது ஆண்டு கால விடுதலைப் போராட்டத்தை சர்வதேசத்தின் துணையுடன் முடிவுறுத்திய இலங்கை ஆட்சியாளர்கள் இன்று வரை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை.

தீர்வு காணுகின்ற முயற்சி நடப்பதாக சர்வதேசத்தின் மத்தியில் கூறப்பட்டாலும் அவை எதுவும் நடைமுறையில் இல்லை என்பதே உண்மை.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட இடைக்கால வரைபிலும் பெளத்தத்துக்கு முன்னுரிமை என்பதே வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெளத்தத்துக்கு முன்னுரிமை வழங்குவதற்கு நாம் எதிர்ப்பில்லை எனக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய போது,வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்மொழிந்தது.

ஆக, இலங்கையில் சிறுபான்மை இன மக்களின் பாதுகாப்பை ஆட்சியாளர்கள் உறுதி செய்ய முடியாதவர்களாக இருப்பதால்,இலங்கையின் சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் தலையீடு அவசியம் என்பது தவிர்க்க முடியாததாகும்.