கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிறிலங்காவுக்கு ஜப்பானிய கடற்படை உதவும்

சிறிலங்காவின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, ஜப்பானிய கடற்படை முழுமையான ஆதரவை வழங்கும் என்று ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா, உறுதியளித்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்திய போதே இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சிறிலங்கா அதிபரின் வதிவிடத்தில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் சிறிலங்கா கடற்படையினருக்கு ஜப்பானில் பயிற்சி வாய்ப்புகளை அதிகரிக்குமாறு சிறிலங்கா அதிபர் விடுத்த கோரிக்கையையும், அட்மிரல் கட்சுரோஷி கவானா ஏற்றுக் கொண்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பின் போது, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா வந்துள்ள ஜப்பானிய பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி அட்மிரல் கட்சுரோஷி கவானா நேற்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுக்குச் சென்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவையும் சந்தித்தார்.

மேலும், சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுடனும், அவர் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.