வர்த்தக நிலையங்கள் உடைப்பு: வியாபாரிகள் அதிருப்தி!

கிளிநொச்சியில் அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு பொருட்களும் பணமும் திருடப்பட்டு வருவதாக வியாபாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் எவ்வித முன்னேற்றகரமான நடிவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிளிநொச்சி நகரின் ஏ9 பிரதான வீதி மற்றும் கனகபுரம் டிப்போ வீதியில் அமைந்துள்ள இருபதுக்கு மேற்பட்ட வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் இருந்து பணமும் பெறுமதியான பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக தொலைபேசி விற்பனை நிலையங்கள் உடைக்கப்பட்டு கையடக்க தொலைபேசி, மீள் நிரப்பு அட்டைகள், உள்ளிட்ட பொருட்கள் திருப்பட்டுள்ளன. இது தொடர்பில் கிளிநொச்சிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போதும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன.

கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வியாபார நிலையங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட பின்னர் திருடர்கள் தங்களின் கைவரிசை காட்டுகின்றனர்.

இதன் போது அருகில் உள்ள வியாபார நிலையங்களின் கண்காணிப்பு கமராக்களில் திருடர்கள் செயற்பாடுகள் அவதானிக்கப்பட்டுள்ள போதும் பொலிஸார் அதனை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் எனவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.