கண்டி வன்முறை! உயிரிழந்த இளைஞன் தொடர்பில் பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

கண்டியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கண்டி, பல்லேகலயில் தீயில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் மரணம் கொலையாக இருக்கலாம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் கொலையாக கருதி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த வீடு மற்றும் அருகிலுள்ள கடைக்கு தீ வைத்தவர்கள் தொடர்பில் முக்கிய பல தகவல்கள் கிடைத்துள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீப ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக சிசிடிவி காணொளிகள் மற்றும் வீடியோ காட்சிகளை பயன்படுத்துவதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 6ஆம் திகதி காலை கண்டி பல்லேகல, கென்கல்ல வீட்டில் இருந்து இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.. 5ஆம் திகதி ஏற்பட்ட அசாதாரண சம்பவத்தின் போது இளைஞனின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. இதன்போது அவரது சகோதரர் மற்றும் பெற்றோரை அவர் காப்பாற்றியுள்ளார் என பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடையவர் என கூறப்படுகின்ற இந்த இளைஞர் அதிக புகையை சுவாசித்தமையினால் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திட்டமிட்ட வகையில் புகையை ஏற்படுத்தி அவரை உயிரிழக்க செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டினை கொலையாக கருதி சந்தேக நபர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டின் கீழ் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.