யாழில் இருவேறு இடங்களில் விபத்து

யாழில் இருவேறு இடங்களில் இன்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் கன்டர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த நிலையில் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்தியின் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, பின்புறமாக வந்த கன்டர் வாகனம் மோதியுள்ளது.

விபத்தில் கோண்டாவில் நவரட்ணராஜா வீதியைச் சேர்ந்த சின்னத்துரை ராசரட்ணம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏ9 வீதியில் மீசாலை – ஐயா கடைச் சந்திப் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐயா கடைச் சந்தியில் வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் கொடிகாமம் பகுதியில் இருந்து வந்த மற்றுமொரு டிப்பர் பின்பக்கமாக மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் தடம் புரண்டதோடு, மோதிய டிப்பர் ரயில் தண்டவாளத்திற்கு குறுக்காக பாய்ந்து மீட்க முடியாதவாறு நின்றுள்ளது.

சம்பவத்தில் தம்மிணைக்குளம் மடு வீதி மன்னாரைச் சேர்ந்த (27 வயது) லோகநாதன் சர்மிலன் என்பவரே காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவத்தினால் புகையிரதப் பாதையில் தடை ஏற்பட்டதனால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகியே புகையிரதங்கள் பயணத்தை தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி மற்றும் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like