யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறு உத்தரவு

யாழ்ப்பாண மாநகரில் சட்டவிரோதமாக இயங்கும் கேபிள் இணைப்புகளை உடனடியாக துண்டிக்குமாறும் அதனை செயற்படுத்துவோரை பொலிஸார் ஊடாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று (25) இரவு பணித்துள்ளார்.

கேபிள் இணைப்பை இடைநிறுத்தி வைத்திருந்த நிறுவனம் ஒன்று இன்றிரவு முதல் சேவையை மீள ஆரம்பித்துள்ளதாக கிடைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த உத்தரவை ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ளார்.

இதனையடுத்து யாழ். நகர் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அதே சட்டவிரோத சேவை வழங்குனரை நீதிமன்றில் காப்பாற்றும் வகையில் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மீது யாழ்ப்பாண நிறுவனம் ஒன்று முன்வைத்துள்ளது. அது தொடர்பில் ஆராயப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.