மாணவிக்கு ஏன் இந்த கொடூரம்? படுகொலையின் பின் கதறி அழும் தாய்

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் கொந்தளிப்பில் கொண்டு சென்று விட்டிருக்கிறது தூத்துக்குடி படுகொலைகள். இலங்கையில் முள்ளிவாய்க்கால் என்றால். தமிழகத்தில் தூத்துக்குடி என்று கலங்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக காவல்துறை.

நூறு நாட்களாக தங்கள் நிலத்தையும், வளத்தையும், எதிர்கால சந்ததியினரின் நல் வாழ்க்கையையும் உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் களம் கண்டனர் தூத்துக்குடி மக்கள். நச்சுத்தன்மை கொண்ட வளத்தை அழிக்கும் அந்த ஆலையை மூடச் சொல்லி அவர்கள் பெரும் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தார்கள்.

அவர்களின் போராட்டம் நூறாவது நாளை எட்டியதும், தங்கள் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கச் சென்ற போது தான் கோரத்தாண்டவம் ஆடியிருக்கிறது தமிழக காவல்துறை. காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இதுவரை பல இளைஞர்களைக் காணவில்லை என்று பெற்றோர்கள் முறைப்பாடுகளை தெரிவித்திருக்கிறார்கள். இன்னமும் நிலைமை சீராகவில்லை. ஆனால், இப் போராட்டம் சதிச் செயல் என்றும், தீவிரவாதிகள் உள் நுழைந்துவிட்டார்கள் என்றும் தட்டிக் கழித்துக் கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை. கொதித்துப் போயிருக்கிறார்கள் தமிழ் மக்கள்.

ஒவ்வொரு அடக்குமுறைகளும், வளங்களைப் புடுங்குவதும் தமிழர் பகுதிகளில் தான். இதனை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று வளர்ந்துவரும் இளைய தலைமுறையினர் போராடத் தொடங்கியிருக்கிறார்கள். இதில் களப்பலியானவர்களில் ஒருத்தி தான் ஸ்னோலின். 18வயதே ஆகும் இந்த யுவதி படித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் போராடும் போது நாங்கள் ஏன் சும்மா இருக்க வேண்டும். இந்த மண்ணிற்காகவும் நமக்காவும் போராட வேண்டும் என்று தன் தாயையும் அழைத்துக் கொண்டு போராட்ட களத்திற்கு சென்று இருக்கிறாள் அவள்.

போராட்டக்களத்திற்குச் சென்றவள் சடலமாக திரும்பி வந்திருக்கின்றாள். தன் மகளின் இழப்பை நினைத்து கதறி அழுதுகொண்டிருக்கின்றார் ஸ்னோலின் தாயார்.

தம்மை ஆளும் அரசே கொன்று வீழ்த்தும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டாள் அவள். காந்திய தேசம் அகிம்சையின் மறுவடிவம். எங்கள் மண்ணில் இந்தக் கொடூரம் நடக்கும் என்று எண்ணியிருக்கமாட்டாள். ஆனால் நடந்தது வேறொன்று.

ஈழத்தைப் போன்றதொரு கொடூரத்தை நிகழ்த்தி வாழ வேண்டிய, சாதிக்க வேண்டிய இளம் யுவதியை படுகொலை செய்திருக்கிறது அரசாங்கம். சாதாரண மீனவக் குடும்பதை சேர்ந்த அவள், தனது சமூகத்தின் அழிவை காண முடியாமல் போராட்டத்தில் முன் நின்றாள்.

ஆனால், அவளை பரலோகம் அனுப்பியிருக்கிறது தமிழக காவல்துறை. அவள் கனவு ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். அதன் மூலம் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கை ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் இன்று அவள் உயிரோடு இல்லை. குறி பார்க்கப்பட்டு, சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறாள்.

எல்லையில் இராணுவ வீரர்கள், எதிரிகளை, தீவிரவாதிகளைக் குறி பார்த்துக் சுட்டுத் தள்ளுவதைப் போன்று செய்திருக்கிறார்கள். இந்து கொடூரம் வேறு எந்த நாட்டிலும் நடந்திருக்கிறது. இலங்கையைத் தவிர.

ஆக, தமிழகம் போராட துணியும், இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடத்தைப் புகட்விட்டிருக்கிறது. இனிமேல் யாரேனும் போராடத் துணிந்தால், போராட்டக் களத்தில் நின்றால் குறி பார்க்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்படுவீர்கள் என்று.

என்ன செய்யும் தமிழினம். சொந்த அரசும், சொந்த காவல்துறையும் சுட்டுத் தள்ளும் பொழுது, எப்பொழுது நீதியும், நியாயமும் கிடைக்கும்.