புத்தளத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு!

புத்தளம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 10 ஆயிரத்து 508 குடும்பங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 107 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவர் மரணமடைந்துள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.ஆர்.என்.கே.அலகஹோன் தெரிவித்தார்.

அந்த வகையில் மாவட்டத்தில் 12 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 231 கிராம சேவகர் பிரிவுகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் 31 கிராம சேவகர் பிரிவில்களில் இருந்து பாதிக்கப்பட்ட 4508 குடும்பங்களைச் சேர்ந்த 17ஆயிரத்து 380 பேர்கள் 95 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கலா ஓயா பெருக்கெடுத்துள்ளதினால் புத்தளம்-மன்னார் பிரதான வீதியின் பழைய எலுவான்குளம் பகுதியிலுள்ள பாலத்தின் ஊடாக சுமார் 3 அடிக்கு மேல் வெள்ள நீர் செல்வதினால் தொடர்ந்தும் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மாதம்பை முதல் மகாவெவ வரையிலான சுமார் இரண்டு கிலோ மீற்றர் துாரம் வரை வெள்ள நீர் பாய்ந்து செல்வதினால் பெரிய வாகங்களைத் தவிர ஏனைய வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே வாகனச் சாரதிகள் மாற்று வீதியைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வாகனச் சாரதிகளிடம் கேட்டுள்ளது.

இதேவேளை தெதுறு ஓயாவின் 06 வான் கதவுகளும் ராஜங்களை நீர்த் தேக்கத்தின் 02 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதினால் அதனை அண்மித்து வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுள்ளதுளள்னர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை கடற்படை மற்றும் இராணுவத்தினர் இணைந்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.