திடீரென உயிரைவிட்ட பொலிஸ் நாய்க்கு நடந்த இறுதிச் சடங்கு! கண்ணீர் விட்டு அழுத பொலிஸார்…..!!

‘கோரா’ இலங்கை பொலிஸ் திணைக்களத்தால் மிக உயர்வாக மதிக்கப்பட்டு அவர்களின் நம்பிக்கையை வென்றதுதான் ‘கோரா’ என்ற பொலிஸ் மோப்ப நாய். பொலிஸ் திணைக்களத்தில் எட்டு வருடங்கள் சேவை புரிந்த நிலையில் அது சில தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்து விட்டது.

இந்த நாயின் மோப்பம் பிடிக்கும் திறன் பொலிஸ் திணைக்களத்தை மட்டுமல்ல, ஊடகவியலாளர்களுக்கே சவால் விடுவதாக அமைந்து விடும். ஆனால், ஊடகத்துறையினரும் விருப்பத்துடன் அடிக்கடி உச்சரிக்கும் பெயர்தான் ‘கோரா’.எட்டு வயதான இந்த மோப்ப நாய் குற்றச் செயல்களைக் கண்டுபிடிப்பதில் மிகக் கெட்டிக்காரன். அனைத்துவிதமான போதைப் பொருட்கள் இரத்தக் கறையுடன் தொடர்புடைய குற்றச் செயல்கள் கொள்ளை, திருட்டு ,போன்ற விடயங்களில் சம்பந்தப்பட்டோரையும் குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஆயுதங்கள் உட்படலான அனைத்தையும் மோப்பம் பிடித்துக் கண்டுபிடிப்பதில் மிகக் கெட்டித்தனமாகச் செயற்பட்டு பொலிஸாரின் கடமைகளை இலகுபடுத்தி விடும்.

களைக்காமல், சளைக்காமல் கிலோ மீற்றர் கணக்கில் ஓடிச் சென்று சந்தேக நபர்களைக் கௌவிப்பிடித்துக் காட்டிக் கொடுத்து விட்டு எவ்வித அகங்காரமும் பெருமையும் வெற்றி மமதையும் கொள்ளாது ஓய்வெடுக்கும்.இப்படியான ஒரு நாய் திடீரென உயிரிழந்தமை பலராலும் அனுதாபத்துடன் பார்க்கப்படுகிறது. அதேவேளை, இன்னொரு சாராருக்கு தங்களது எதிரி ஒழிந்தான் என்ற மகிழ்ச்சிப் பெருக்கு.சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்வோரில் பலர் போதைப் பொருட்களைக் கொண்டு செல்வது வழக்கமான விடயம். அவ்வாறானவர்கள் பொலிஸாரைக் கண்டு அச்சமடையாவிட்டாலும் இந்த ‘கோரா’ வைக் கண்டால் வியர்த்து விறுவிறுத்து போய் விடுவார்கள்.

சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தில் அங்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் இந்த நாயைக் கொண்டே பொலிஸார் சோதிப்பர். அப்போது அதன் மோப்ப சக்தியிலிருந்து எந்தப் போதைப் பொருளும் தப்பிவிட முடியாது.இதன் மூலம் பொலிஸ் திணைக்களத்துக்கு அதிக வருமானத்தையும் இந்த நாய் பெற்றுக் கொடுத்தது.கூகுளில் ‘கோரா மோப்ப நாய்’ என டைப் செய்து தேடினால் இந்த நாயின் சாதனைப் பட்டியலை அறிந்து கொள்ள முடியும்.மோப்ப நடவடிக்கைகளின் போது மனிதருக்கு எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமலும் மிகக் கண்ணியமாகவும் இந்த நாய் நடந்து கொள்ளுமாம்.இறுதியாக ஹட்டன் பொலிஸ் வலயத்தில் 3 வருடங்கள் சேவையாற்றிய நிலையில் ‘கோரா’ இரண்டு தினங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்து விட்டது.

கண்டியிலுள்ள மோப்ப நாய்கள் பயிற்சி வழங்கும் தலைமை பொலிஸ் நிலையத்துக்கு பயிற்சிக்காக அழைத்து சென்ற போதே இது உயிரிழந்தது. இதன் மரணத்துக்கான காரணம் உடனடியாகத் தெரிய வராத நிலையில், அதன் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதனையடுத்து ‘கோரா’ புற்று நோய் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவ பிரிவு அறிக்கை வெளியிட்டதன் மூலம் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்தது.இந்த ‘கோரா’ மோப்ப நாயின் இறுதிக்கிரியைகள் ஹட்டன் பொலிஸ் நியைத்தில் பொலிஸாரின் மரியாதையுடன் நேற்று இடம்பெற்றுள்ளது.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like