ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன்னை தாக்க முற்பட்டதாகவும், தன்னிடம் ரூபா 25 ஆயிரத்தை கொள்ளையிட முயன்றதாகவும் தெரிவித்து, பெண் ஒருவரால், குறித்த இருவருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, நீதிமன்ற அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ரோஹித போகொல்லாகமவின் மனைவி தீப்தி போகொல்லாகம மற்றும் அவரது இரு மகள்களில் ஒருவருக்கு எதிராகவே இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு, கறுவாத்தோட்டம் பொலிசில் மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு, இன்று (01) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.