குழந்தையை பார்க்க முடியவில்லை: இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பொலிஸ்

தமிழகத்தில் விடுமுறை தராத காரணத்தினால் பொலிசார் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர் மோகன். திருப்பூர் மாநகர காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வரும் இவருக்கு மனைவியும் 3 மாத குழந்தையும் உள்ளனர்.

மோகன் பொலிஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருவதால், அவர் மட்டும் திருப்பூரில் சிறுபூலுவப்பட்டி என்ற பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மோகன், வஞ்சிபாளையம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்ததை அறிந்த ரயில்வே பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன் பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விடுமுறையே கிடைக்காமல், தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழலில் இருந்ததால், ஊருக்குச் சென்று தன் குழந்தையை பார்க்க முடியாததால் மோகன் பெரும் வேதனையில் இருந்துள்ளார்.

அதுமட்டுமின்றி விடுமுறை கேட்கும்போதெல்லாம் அதிகாரிகள் மறுத்து வேறு பணி கொடுத்து டார்ச்சர் செய்ததால் மனம் உடைந்து காணப்பட்ட இவர், ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் கூறியுள்ளனர்.