இலங்கையில் மாணவிகளை காம வேட்டையாடும் இஸ்லாமிய பேராசிரியர்கள்!! நடப்பது என்ன?

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் பாலியல் இலஞ்சம் கோரிய சில விரிவுரையாளர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், விரைவில் அவர்கள் குறித்த தகவல்கள் அம்பலப்படுத்தப்படும் என்றும் உயர்கல்வி மற்றும் கலை, கலாசார அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு மாகாணத்தில் வரலாறுகாணாத வகையில் குடு (சட்டவிரோத போதைப்பொருள்) பாவனை அதிகரித்துள்ளது எனவும், இதைப்பற்றி அங்குள்ள அரசியல்வாதிகள் கதைப்பதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்படி தகவல்களை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. பயங்கரமானதொரு யுகம் உருவாகியுள்ளது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன. சட்டவிரோத போதைப்பொருட்கள் விற்பனைக் குழுக்களினதும், பாதாளக் குழுவினரதும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இவ்விரு தரப்பினரும் ஒன்றாக இயங்கக்கூடியவர்கள். அரசியல்வாதிகளினதும், சில உயர் பொலிஸ் அதிகாரிகளினதும் ஆசியுடனேயே இக்குழுக்கள் உருவாகின்றன. மேற்படி தரப்புகளின் ஆசியின்றி உருவாகும் குழுக்கள் ஆரம்பத்திலேயே அழிக்கப்படுகின்றன.

வடக்குக்கு அண்மையில் சென்றிருந்தேன். அங்கு வரலாறு காணாதவகையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. இளைஞர்கள் சீரழிந்துவருகின்றனர். நாடாளுமன்றத்தில் வேறு வேறு விடயங்களையெல்லாம் கதைக்கும் வடக்கு அரசியல்வாதிகள் இந்த விடயம் பற்றி கதைப்பதில்லை.

இன்று பல்கலைக்கழக கட்டமைப்புக்குள்ளும் போதைப்பொருள் புகுந்துள்ளது. அண்மையில் சிற்றுாழியரொருவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால், கள்ளச் சாராயம் வைத்திருந்தார் என அவர் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார். இதுபற்றி அறிக்கை கோரியுள்ளோம்.
உயர்தரம் வரை ஆசிரியர்களின் வழிகாட்டலில் ஒழுக்கமாக கற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் காலடியெடுத்து வைத்ததும் மாறிவிடும் நிலை காணப்படுகின்றது. பகிடிவதைகளும் தலைதூக்கியுள்ளன. பாரதூரமான 260 சம்பவங்கள் அண்மையில் பதிவாகின. பாலியல் இலஞ்சம்கூடக் கோரப்படுகின்றது.

உபவேந்தருக்குக்கூட அச்சுறுத்தல் இருப்பதால் எவரும் முறைப்பாடு செய்வதில்லை. அவ்வாறு செய்தால் பல்கலைக்கழகத்துக்குள் வைத்து கை, கால், மண்டை உடைக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்படுகின்றது.
அதேவேளை, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள், பெற்றோர், கல்விச் சமூகம் என மூன்று தரப்பையும் நாடாளுமன்றத்துக்கு அழைத்தேன். அங்கு நெடுநாளாகவே பிரச்சினை இருந்துவருகின்றது. மாணவர்கள் பல்கலைக்கழகத்தை விட்டுச்செல்லும் நிலையும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் நீண்டநாட்கள் பிரச்சினை நிலவியதால் மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற உபவேந்தரொருவரை நியமித்தோம். அவருக்கும் வேலைசெய்வதற்கு இடமளிக்காத வகையில் அங்கு மாபியாக்கள் இயங்குகின்றன.
பரீட்சையில் சித்தியடையவேண்டுமானால் பாலியல் இலஞ்சம் வேண்டுமென சில விரிவுரையாளர்கள் கேட்பதாக மாணவிகள் பெற்றோரூடாக முறைப்பாடு செய்துள்ளனர். இவை குறித்து விசாரணைகள் நடக்கின்றன.
ஒரு பேராசிரியர் குறித்து (அமைச்சர் பெயரைக் குறிப்பிட்டார்) அடிக்கடி முறைப்பாடு வருகின்றது. எனவே, இவ்வாறு செயற்படுபவர்களின் விவரங்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும்.

முன்னாள் உபவேந்தருக்கு எதிராக நிறைய முறைப்பாடுகள் இருக்கின்றன. கோப் குழுவில்கூட நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியல் இருக்கின்றது. இன்று (நேற்று) அவர் எம்.பியாகப் பதவியேற்றுள்ளார்” – என்றார்.