கொக்குவில் வாள்வெட்டு: பாதிக்கப்பட்டோரே கைது!! – சட்டத்தரணி மன்றுரை!!

கொக்குவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த வாள்வெட்டுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் இருவரும் தாக்குதலுக்குள்ளானவர்கள். முறைப்பாட்டாளர் மற்றும் அவருடன் இணைந்தவர்களே தாக்குதல் நடத்தினர்.

இவ்வாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று முறைப்பாட்டாளர் எதிர்வரும் 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் என்று அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தது.

4 மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல், அந்தப் பகுதி இளைஞன் ஒருவரை தாக்கியது. இளைஞன் காயமடைந்தார். அங்கிருந்து தப்பித்த கும்பலை, அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி துரத்தித்திச் சென்றனர். கும்பலில் வந்த ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டது. மடக்கிப் பிடிக்கப்பட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தனர்.

எனினும் வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதன்போது சந்தேநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மேற்கண்டவாறு மன்றுரைத்தார். சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொலிப் பதிவு ஒன்றும் அவரால் மன்றில் முன்வைக்கப்பட்டது.

“காணொலியில் இரண்டு தரப்பும் மோதுகின்றன. மற்றைய தரப்பிடம் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் உள்ளன” என்று மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

பொலிஸார் மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணியின் விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளரை வரும் 18ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறும் நீதிவான் அழைப்பாணை உத்தரவு பிறப்பித்தார். வன்முறைச் சம்பவம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டது.