வறுமையால் ஆபத்துடன் விளையாடிய கிளிநொச்சி இளைஞன் பலி! கண்ணீருடன் தந்தை

நாம் பணிபுரியும் இடம்மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் தன்னிடம் கூறியதாக, அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இருந்து விழுந்து கிளிநொச்சியை சேர்ந்த 19 வயது இளைஞன் கோணேஸ்வரன் நிதர்ஷன் கடந்த எட்டாம் திகதி உயிரிழந்தார்.

தாமரை கோபுரத்தின் மின்தூக்கியில் இருந்து விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தனது மகனின் இழப்பு தொடர்பில் உயிரிழந்த இளைஞரின் தந்தை கூறுகையில்,

எனக்கு நான்கு பிள்கைள் உள்ளனர். நாம் வறுமைக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம். குடும்பத்தில் மூத்தவரான உயிரிழந்த மகன் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார்.

அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். இந்த நிலையில் பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து வேலை செய்திருக்கிறார்.

கடந்த ஏழாம் திகதி தான் அவர் தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார்.

நான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வருமாறு கூறினேன். அவரும் வெள்ளிக்கிழமை வருவதாக கூறினாரென கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவருடன் பணிபுரிந்த சத்திய ரூபன் குறிப்பிடுகையில், எனது நண்பனான கோணேஸ்வரன் நிதர்ஷன் உட்பட ஐவர் தொழிலுக்காக கொழும்பிற்கு வந்தோம்.

இதன்போது நாம் பணிபுரியும் இடம் மோசமானது என கோணேஸ்வரன் நிதர்ஷன் என்னிடம் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தில் கடந்த எட்டாம் திகதி நாம் கடமைக்கு சென்றோம்.

நாம் தனித்தனி இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டோம். அவர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை.

வேலை செய்து கொண்டிருக்கும் போது எனக்கு குறுஞ் செய்தியொன்று வந்தது. அதில் கோணேஸ்வரன் நிதர்ஷன் விழுந்து விட்டதாக இன்னுமொரு நண்பர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோணேஸ்வரன் நிதர்ஷனின் தொலைபேசிக்கு நான் அழைப்பினை ஏற்படுத்திய போதும் அது செயலிழந்திருந்தது.

அவர் விழுந்திருந்த இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.