வவுனியா நகர்ப்பகுதியில் டெங்கு நோய் தாக்கம் தீவிரம்!!

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா நகரை அண்டிய பகுதிகளான தேக்கவத்தை, வெளிவட்ட வீதி, கற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் இருந்துவருவதை பூச்சியியலாளர்கள் ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் நுளம்புக் குடம்பிகளை இல்லாதொழிப்பதற்கு பொது சகாதாரப் பரிசோதகர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதற்கமைய தமது இருப்பிடங்களை சுத்தப்படுத்தி சிரமதானம் மேற்கொள்ளுமாறும் குறித்த பகுதிகளில் இனிவரும் காலங்களில் இவ்வாறான டெங்கு நுளம்புக்குடம்பிகள் இனங்காணப்பட்டால் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு குறித்த பகுதிகளிலிருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.