இலங்கையில் திருமணம் செய்த பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை

பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் இலங்கையில் இருந்து தன்னுடைய சொந்த நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்.பிரித்தானியாவின் Edinburgh பகுதியைச் சேர்ந்தவர் Diane De Zoysa(60). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு Priyanjana De Zoysa(26) என்ற இலங்கை இளைஞரை திருமணம் செய்துள்ளார்

இலங்கைக்கு Diane De Zoysa தன் கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இலங்கை வருவதற்கு முன்பு அங்கிருந்த தன்னுடைய வீட்டை விற்று பணத்தை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.அந்த பணத்தை வைத்து இலங்கையில் வீடு வாங்கிய இவர், அதன் பின் தன் கணவருக்கு 31,000 பவுண்ட் மதிப்புள்ள மினி பேருந்தை வாங்கிக் கொடுத்துள்ளார்

சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த போது கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் திகதி Priyanjana De Zoysa சுட்டுக் கொல்லப்பட்டார்.பணத்திற்காக இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர் இறந்த பின்பு அவரின் குடும்பத்தை Diane De Zoysa கவனித்து வந்துள்ளார்.இந்நிலையில் மீண்டும் பிரித்தானியா திரும்ப வேண்டும் என்பதற்காக தன்னுடைய பணத்தில் இலங்கையில் வாங்கிய வீட்டை விற்பதற்காக இவர் முயன்றுள்ளார்.

ஆனால் அந்த வீடு கணவரின் குடும்பத்தாரின் பெயரில் இருப்பதால், அவர்கள் விற்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் தொடர்ந்து இலங்கையில் வாழ்ந்து வரும் அவருக்கு பல உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், வெப்பம் எனக்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் அதுமட்டுமின்றி தற்போது கடனாளியாக இருப்பதாகவும், இதனால் நான் கடைசி வரை இங்கேயே இருந்துவிடுவேனோ என்ற அச்சம் இருப்பதாக Diane De Zoysa கூறியுள்ளார்

மேலும் தன்னிடம் தற்போது பணம் இல்லை எனவும், பிரித்தானியாவிற்கு செல்லவேண்டும் என்றால் விமானத்தில் செல்வதற்கு கூட பணம் இல்லாமல் தவிப்பதாகவும் வேதனையாக கூறியுள்ளார்.இப்படி தொடர்ந்து போராடி வரும் அவர் நிச்சயமாக இந்த வீட்டை விற்பனை செய்த பின்னரே நான் பிரித்தானியாவுக்கு செல்வேன் என்ற நம்பிக்கையில் உள்ளார்.

இருப்பினும் இது குறித்து அவர் பிரித்தானியா உயர் ஆணையத்திடம் உதவி கேட்ட போதும், அவர்கள் சில ஆங்கில வழக்கறிஞர்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அவர்கள் தற்போது வரை எதுவும் செய்யவில்லை என புலம்பியுள்ளார்.இதனால் அவர் தற்போது வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகத்தின் உதவியை பெறுவதற்கு முயற்சி செய்து வருகிறார்.