யாழில் இளைஞனை சுட்டுக்கொன்ற பொலிஸ் இன்னும் கைதாகவில்லை

மல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை எனவும் இதனால் அவர் தொடர்ந்தும் பணியிலேயே ஈடுபடுகின்றார் என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம்-கே.கே.எஸ் வீதியில், மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் நேற்று மாலை பெருநாள் இடம்பெற்றது. அதன்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டது. இதன்போது குழப்பநிலையை தடுக்க முற்பட்ட அவ்வழியே சென்ற சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது – 32) என்ற இளைஞனே மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு எதிராக வீதி மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களை போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினார்.

அத்துடன், பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தார். இந்த நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய நீதிவான் உத்தரவிடவில்லை என தெல்லிப்பழைப் பொலிஸார் தெரிவித்தனர்.