முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணத்தில்!

யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக சர்வதேச பெண்கள் மகாநாடு நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தேவநாயகம் தேவனாந்த் தெரிவித்துள்ளார்.

‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம்;’; என்ற தலைப்பில் சர்வதேச பெண்கள் மகாநாடு எதிர்வரும் யூலை மாதம் 21 மற்றும் 22 திகதிகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பெண்கள் தொடர்பாகப் பணியாற்றும்; ஆண் பெண் இருபாலாரும் பங்கு பற்றவுள்ளார்கள் என இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் பெண்கள் தொடர்பாகப் பணியாற்றும்; ஆண் பெண் இருபாலாரும் பங்கு பற்றவுள்ளார்கள்.

மகாநாட்டில் ஆய்வாளர்கள் சமர்ப்பிக்கக் கூடிய ஆய்வு அறிக்கைகளுக்கான கருப்பொருட்கள் தரப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு,

•பெண்களை வலுவூட்டலில் உள சமூக மேம்பாட்;டுச் செயற்திட்டங்கள்.

•வளர் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்கள்.

•சமூக மயப்படுத்தல், பாதுகாப்பு தொடர்பாக பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

•பெண்களுக் கெதிரான வன்முறைச் கலாசாரத்தை எதிர்கொள்ளுதல்.

•பால்நிலை சமத்துவமும், அதனைப் புரிந்துகொள்ளலும்.

•பெண்கள் தொழிற்சக்தியும், தொழில் பார்க்கும் சூழலும்.

•பெண்களை வலுவூட்டலில் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் வகிபாகம்.

•பெண்களை வலுவூட்டல் தொடர்பான கொள்கைத் திட்டங்கள்.

•பெண்களின் பாலியல் மற்றும் இனவிருத்தி உரிமைகள்.

•பெண்களின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நுண்நிதிக்கடன்கள்.

•பெண்களும், ஊடகங்களும்;.

மேற் கூறப்பட்ட விடயங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவது ஒரு விடயத்தில் ஆய்வு அறிக்கை யாரொருவரும் சமர்ப்பிக்க முடியும். அதேவேளை ஆய்வு மகாநாட்டில் அவதானிகளாகவும் பங்குகொள்ளமுடியும்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்ற அபிவிருத்தி மற்றும் மீள் நல்லிணக்கச் செயற்பாடுகளில் பெண்களின் நிலையை வலுப்படுத்துவதற்கான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு வசதியாக இந்த ஆய்வு மகாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் யுத்தத்தின் பின்னரான சூழல் பற்றிய சமாந்தரமான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கற்றுக் கொண்ட பாடங்களை வெளிப்படுத்துதல். புதிய செயற்திட்டங்கள் பற்றிய அறிவைப் பெறுதல், வலையமைப்புக்களை ஏற்படுத்துதல் தொடர்புகளை வலுப்படுத்துதல் போன்ற பல நோக்கங்களையும் இந்த ஆய்வு மகாநாடு கொண்டுள்ளது.

சமூக ஆய்வுகள் சமூக மேம்பாட்டுக்கானவையாக அமைய வேண்டும். ஆய்வு நிலைப்பட்டு சிந்திப்பதும்; செயற்படுவதும் நிலைத்த அபிவிருத்திக்கான அடிப்படையாக அமையும். இதனால் சாதாரண மக்களிடமும் ஆய்வுப் பண்பாடு கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஆய்வுகள் வெறுமனே கல்வியியலாளர்களின் பதவியுயர்வுக்கானவையாக அமையாது அவை பிரயோக ஆய்வுகளாக அமைய வேண்டும் என்ற நோக்கம் கருதி தன்னார்வத் தொண்டுப் பணியாளர்களும் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்த மகாநாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அரசசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் இந்த மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகின்றது.

யாழ் மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம் 1990 ஆண்டு தொடக்கம் கடந்த 28 ஆண்டுகளாக யாழ் மாவட்டத்தில் தன்னார்வத் தொண்டுப்பணியில் ஈடுபடுகின்ற 28 தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்கள் சேவையை வழிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு வலையமைப்பாகும்.

யுத்த காலத்திலும் யுத்தத்தின் பின்னரான சூழலிலும் இயற்கை அனர்த்தங்களின் போதும் மக்களின் நலன் சார்ந்த சேவைகளை ஒழுங்கு படுத்துவதற்கும் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பதுமான பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த மகாநாட்டிற்கு இலங்கையின் பெண்கள் விவகார அமைச்சர் பிரதம விருந்தினராக கலந்து கொள்வதோடு இலங்கைப் பிரதமரின் பாரியார் திருமதி மைத்திரி ரணசிங்க அவர்கள் முதன்மை ஆய்வுரையை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கு உலகெங்குமுள்ள தமிழர்கள் தங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம். இலங்கையின் வடபுலத்தில் யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் தொடர்பான ஆக்க பூர்வமான பணிகளுக்கு உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் அனுபவங்களையும் ஏனைய நாடுகளின் பட்டறிவு மற்றும் மீண்டெழுந்த செய்பாடுகள் தொடர்பாக விடயங்களை இந்த ஆய்வரங்கில் பகிர்ந்து கொள்ள வேண்டும். நேரடியாக சமூகம் தரமுடியாவிட்டாலும். தமது அனுபவங்களையும் ஆய்வுகளையும் மகாநாட்டில் சமர்ப்பிக்க முடியும்.

தென்னாசிய நாடுகள் பலவற்றிலிருந்தும்; ஐரோப்பாவில் இருந்தும் பலர் இதில் பங்கு கொள்கிறார்கள். ஆய்வரங்கு மற்றும் கலைவெளிப் பாட்டரங்கு என்று இரண்டு பிரிவாக மகாநாடு நடைபெறவுள்ளது. மகாநாட்டுக்காக இணையத்தளம் (www.iwcsl2018.com)ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

பொதுவாக பாரிய நிதியை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவது வழமை. இங்கு பல நல்ல உள்ளங்களின் சமூக அக்கறை மனப்பாங்கை முதலீடாகக் கொண்டு இந்தப் பாரிய செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போதியளவு நிதிப்பலத்துடன் இது ஆரம்பிக்கப்படவில்லை.

இருப்பினும் பலர் தமது சேவையை வழங்குவதற்கு தாமாகவே முன்வந்துள்ளார்கள். ஒவ்வொரு பணியையும் ஒவ்வொருவர் பொறுப் பெடுத்து நடத்துகிறார்கள். இந்தப் பாரியபணியில் சேர்ந்து மகாநாட்டை வெற்றிபெறச் செய்ய மேலும் பலரை அழைக்கிறோம். எந்தவொரு வடிவத்திலும் ஒத்துழைப்பை வழங்க முடியும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.