மாணவிக்கு இரும்பு கம்பியால் நைய புடைப்பு – தென்மராட்சியில் சம்பவம்

யாழ். தென்மராட்சியில் அமைய பெற்று உள்ள அரச தமிழ் கலவன் பாடசாலை ஒன்றின் அதிபருக்கு எதிராக சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சர் அலுவலகம், கொடிகாமம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் நேற்று முன் தினம் இரவு குற்றவியல் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும், சாவகச்சேரி நகர சபை உறுப்பினருமான கே. சர்வானந்தன் இம்முறைப்பாட்டை மேற்கொண்டு உள்ளார்.

இப்பாடசாலையில் தரம் 10 இல் படிக்கின்ற இவரின் மகளை பாடசாலை விளையாட்டு மைதானத்தில் வைத்து பகிரங்கமாக இரும்பு கம்பியால் அதிபர் நைய புடைத்தார் என்றும் இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இவரின் மகள் திடீர் சுகவீனம் அடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும் இவர் முறையிட்டு உள்ளார்.

பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்வதற்கு முன்னர் அதிபர், வலய கல்வி பணிப்பாளர் ஆகியோரை இவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோதும் இருவரும் பொறுப்பற்ற விதத்தில் பதில் வழங்கியதாகவும் இம்முறைப்பாட்டில் சொல்லப்பட்டு உள்ளது.

பாடசாலை முடித்து தாயின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்தபோது மாணவி மயங்கி விழுந்து உள்ளார். உடனடியாக இவரை சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்த்தபோதும் இவரின் மயக்கம் நீங்காத நிலையில் அம்புலன்ஸ் வண்டியில் இரவு நேரம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு போயினர். இவருக்கு மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் நாடி, கை ஆகியன உடைந்து காணப்பட்டன. அதே நேரம் இவரின் கையில் அடிகாயம் இருப்பதையும் வைத்தியர்கள் அடையாளம் கண்டனர். இவர் மயக்கம் தெளிந்த பிற்பாடு வினவியபோது அதிபர் இரும்பு கம்பியால் அடித்ததாக இவர் சொல்லி இருக்கின்றார்.