வவுனியாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்டவர் வைத்தியர் இல்லையாம்!!

வவுனியாவில் யுவதி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் பதிவுசெய்யப்பட்ட வைத்தியரல்ல என மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுந்தினம் தனது வைத்திய நிலையத்திற்கு ஆய்வு அறிக்கைகளை எடுத்துச் செல்லும் பணியாள யுவதியை குறித்த வைத்தியர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த வைத்தியர் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டு ஒரு வார விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

வைத்தியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வவுனியா மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஊடகங்களிற்கு ஓர் அறிக்கையினை வழங்கியுள்ளனர்.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

”அண்மையில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர் என குறிப்பிட்ட செய்தி தொடர்பானது…”

குறிப்பிட்ட நபர்

1) அரச வைத்தியசாலை எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் அல்ல

2) ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதி அற்றவர் எனவும்

3) அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும் இவரை வைத்தியர் என குறிப்பிட்டு முழு வைத்திய சமூகத்தையும் கொச்சை படுத்துவதாக செய்தி அறிக்கை அமைந்துள்ளது.

எனவே இது தொடர்பான மாற்றத்தினை செய்தி அறிக்கையில் மேற்கொள்ளுமாறு வவுனியா அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பாக கேட்டுகொள்கிறோம்

என குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.