கதறியழுத சிறுமி : அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்த சரத் பொன்சேகா!!

எதிர்வரும் 3 மாதத்தில் சிங்கராஜா வனத்தில் உள்ள யானைகளுக்கு வேறு இடமொன்று வழங்கப்படாவிட்டால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிங்கராஜா வனத்திலுள்ள யானைகளை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரக்குவானை ரஜவத்த கிராம மக்களை சந்தித்த அமைச்சர் சரத் பொன்சேகா இது தொடர்பில் பேசியுள்ளார்.

கலந்துரையாடலின் போது சிறுமியொருவர், சென்ற வருடம் யானை இரண்டு பேரை கொன்று விட்டது. அதில் ஒருவர் எனது அப்பா. அப்பா இறந்துவிட்டதால் என்னால் கல்வி நடவடிக்கைகளை தொடர முடியாதுள்ளது என தெரிவித்து கதறியழுதுள்ளார்.

இதனையடுத்து அமைச்சர் சரத் பொன்சேகா கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஜனாதிபதி என்னுடன் கதைத்திருந்தார்.

சிங்கராஜா வனத்திலுள்ள யானைகள் தொடர்பில் தற்போதைய நிலை என்ன? என்று கேட்டார். அப்பொழுது நிலைமையை முழுமையாக விளக்கினேன்.

இதனையடுத்து, யானைகளை மாற்றுவதற்கான வேறு இடமொன்றை தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறியபடி வேறு இடமொன்று தரப்படாவிட்டால் நான் அமைச்சுப் பதவியில் இருக்க மாட்டேன்.

பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவும் தனது பதவியை துறப்பதாக என்னிடம் தெரிவித்துள்ளார் என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.